CRIME
அடக்கொடுமையே.. சாதாரண கழிவுநீர் தகராறு… கல்லூரி மாணவணுக்கு நேர்ந்த கொடூர கதி.. ஸ்ரீவைகுண்டத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்கற்குளம் கிராமத்தில், வீட்டின் முன்பு கழிவுநீர் ஓடுவது தொடர்பாக மாரியப்பன் மற்றும் சுந்தர்ராஜன் குடும்பத்தினரிடையே நீண்ட நாட்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், அக்டோபர் 25 ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள கோயிலில் திருவிளக்கு பூஜை முடிந்த பின்னர், ஊர் மக்கள் ஒன்றாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் வெடித்தது. இந்த வாக்குவாதம் முற்றியதில் இரு தரப்பினரும் கத்தி, வாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கிக்கொண்டனர். இந்த மோதலில் மாரியப்பனின் மகனான 20 வயது கல்லூரி மாணவர் இசக்கிராஜா பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்; எதிர்த்தரப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், உயிரிழந்த இசக்கிராஜாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் மாரியப்பன் தரப்பைச் சேர்ந்த 4 பேர் மீதும், சுந்தர்ராஜன் தரப்பைச் சேர்ந்த 10 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மீண்டும் அசம்பாவிதங்கள் மற்றும் மோதல்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காக ஆழ்வார்கற்குளம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாதாரண கழிவுநீர் பிரச்சினையில் ஏற்பட்ட தகராறு, ஒரு கல்லூரி மாணவனின் உயிரைப் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
