LATEST NEWS
“வாய் மட்டும் வங்காள விரிகுடா அளவுக்கு பேசுதே…” ஆட்சியில் இருந்தப்போ தூங்குனீங்களா சார்.? மாஜிக்கள் ஊழல் வழக்கை வச்சு தவெக அதிரடி அட்டாக்..!!
திமுக முன்னாள் அமைச்சர்களான கே.என்.நேரு மற்றும் அன்பில் மகேஷ் ஆகியோர் மீதான ஊழல் வழக்குகளின் மனுக்கள் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதை முன்வைத்து, திமுக தலைவர் ஸ்டாலினைத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஐடி விங் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் மக்கள் பிரச்சினைகள் நிலவுவதாகத் திமுக தரப்பில் தொடர் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வரும் சூழலில், தவெகவின் இந்த அதிரடி அறிக்கை அரசியல் களத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தவெக ஐடி விங் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலினை, “துப்பில்லாத ஸ்டாலின் சார்” என நேரடியாகக் குறிப்பிட்டுத் தாக்கியுள்ளனர். மேலும், “ஆட்சியில் இருந்தபோது நீங்கள் என்ன செய்து கொண்டு தூங்கினீர்களா? உங்கள் மந்திரிகள் இத்தனை ஊழல் வழக்குகளை வாங்கிக் குவித்துக்கொண்டு இருக்கும்போது, வாய் மட்டும் ஏன் சார் வங்காள விரிகுடா அளவுக்குப் பேசுகிறது?” என்று அடுக்கடுக்கான காரசாரமான கேள்விகளை எழுப்பி தவெக தரப்பு மிகக் கடுமையான வார்த்தைகளால் சாடியுள்ளது.
முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் நகராட்சித் துறை பணி நியமன முறைகேடு தொடர்பான மறுஆய்வு மனுவும், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷின் பள்ளி அங்கீகார முறைகேடு வழக்கின் முன்ஜாமீன் மனுவும் சென்னை உயர் நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நீதிமன்ற உத்தரவுகளின்படி, அன்பில் மகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படும் நிலையில், மாஜிக்களின் இந்த மெகா ஊழல் விவகாரங்களை முன்வைத்து தவெக மற்றும் திமுக இடையே இருமுனை அரசியல் மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
