CRIME
பதற வைக்கும் சிசிடிவி காட்சி..! சைக்கிளில் கோவிலுக்குச் சென்றபோது நேர்ந்த பயங்கரம்.. ஆர்.எஸ்.எஸ் மூத்த பிரமுகர் பரிதாப பலி… கார் மோதி நேர்ந்த கொடூரம்..!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் மூத்த உறுப்பினர் ஒருவர் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு கோவிலுக்குச் செல்லச் சாலையைக் கடந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே கொடூரமாகப் பலியான பதைபதைக்கும் வீடியோ வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாபுரா தாலுகா கோட்டா மணூர் பகுதியைச் சேர்ந்த 65 வயதான குருதாஸ் ஷெனாய், அப்பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிர உறுப்பினராவார். திங்கள்கிழமை அதிகாலை அவர் வழக்கம்போலத் தனது சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அமிர்தேஸ்வரி கோவிலுக்குச் சாமி தரிசனம் செய்யக் கோட்டா தேசிய நெடுஞ்சாலை சந்திப்பைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது உடுப்பியில் இருந்து குந்தாபுரா நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, எதிர்பாராத விதமாக குருதாஸ் ஷெனாய் மீது பலமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் குருதாஸ் ஷெனாய் சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த பிரதீப் காஞ்சன் பலத்த காயங்களுடன் பிரம்மவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இக்கொடூர விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி நெட்டிசன்களை உறைய வைத்துள்ள நிலையில், கோட்டா போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
