LATEST NEWS
“அய்யோ… அப்போ அன்னைக்கு நாங்க எரிச்சது யாரு..?” இறந்துட்டான்னு நினைச்சு இறுதிச்சடங்கே முடிச்சாச்சு… 3 வருஷம் கழிச்சு உயிருடன் வந்த மகள்..! காவல்துறையை அதிரவைத்த சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் குடும்பத்தினரால் இறந்துவிட்டதாக நம்பப்பட்டு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்ட இளம்பெண், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு குஜராத்தில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நவாப்கஞ்ச் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட உம்ராவ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த பன்வாரி லால் என்பவரது 28 வயது மகள் ப்ரீத்தி, கடந்த 2023ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி அன்று வீட்டிலிருந்து சென்றுவிட்டு மீண்டும் திரும்பவில்லை. குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்தத் தகவலும் கிடைக்காததால், மே 16ஆம் தேதி காவல்துறையில் ஆள்காணிப்புக் புகார் அளிக்கப்பட்டது. தொடர்ந்து காத்திருந்த குடும்பத்தினருக்கு எந்தத் துப்பும் கிடைக்காமல் தவிப்பு நீடித்தது.
இதற்கிடையே, கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி கோரக்பூர் பகுதியில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. காவல்துறையின் தகவலின்பேரில் அங்கு சென்ற குடும்பத்தினர், சடலத்தின் அடையாளங்களை வைத்து அது ப்ரீத்திதான் என்று தவறாக நம்பினர். டிஎன்ஏ பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பே, அக்டோபர் 4ஆம் தேதி குடும்பத்தினர் அந்தச் சடலத்தைத் தங்கள் மகளுடையது என்று கருதி இறுதிச் சடங்குகளை நடத்தி, அதன் பிறகு தேதியும் பார்த்துத் தேஹ்ரவி (13ஆம் நாள் சடங்கு) நிகழ்ச்சியையும் முடித்தனர். இதனால் குடும்பத்தில் ஆழ்ந்த சோகமும் மாமமும் சூழ்ந்திருந்தது.
இந்நிலையில், குஜராத் மாநிலம் வதோதரா பகுதியில் உள்ள மகளிர் பாதுகாப்பு மையத்திலிருந்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. அங்குள்ள மையத்தில் பாதுகாப்பாக இருந்த ப்ரீத்தி, தனது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் காவல்துறையினர் பிரயாக்ராஜில் உள்ள அவரது குடும்பத்தைத் தொடர்பு கொண்டனர். காணொளி அழைப்பு மூலம் தாயும் மகளும் நேரில் பேசிக் கொண்டபோது, ப்ரீத்தி தன்னை உயிருடன் கண்ட மகிழ்ச்சியில் தாயார் கண்ணீர் விட்டுக் கதறினார். தன் மகளைக் கண்கூடாகக் கண்ட குடும்பத்தினர் இன்ப அதிர்ச்சியில் உறைந்தனர். தற்போது குடும்பத்தினர் அவரைப் பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரக் குஜராத்திற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். அதே நேரத்தில், இதற்கு முன்பு குடும்பத்தினரால் இறுதிச் சடங்கு செய்யப்பட்ட அந்த அடையாளம் தெரியாத சடலம் யாருடையது என்ற விசாரணை தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
