CRIME
“இனி இந்த சொத்தை வச்சுக்கிட்டு ஆடுங்க..!” 2 பக்க கடிதம் எழுதிவிட்டு 3 குழந்தைகளுடன் தாய் எடுத்த விபரீத முடிவு.. அம்பலமான மாமனாரின் சதி..!!
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் முட்லானா கிராமத்தில், சொத்துப் பிரச்சனை மற்றும் குடும்பத் தகராறு காரணமாக 38 வயது மதிக்கத்தக்க ரீமா என்ற தாய், தனது மூன்று குழந்தைகளைக் கொடூரமாகக் கொன்றுவிட்டுத் தானும் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியரான இவரது கணவர் பணி முடிந்து வீட்டிற்குத் திரும்பியபோது, மனைவியும் 11 மற்றும் 7 வயதுடைய இரு மகள்களும், 4 வயது மகனும் சடலமாகக் கிடப்பதைக் கண்டு உறைந்துபோனார். இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், உயிரிழந்த பெண் எழுதி வைத்துள்ள இரண்டு பக்க தற்கொலைக் குறிப்பைக் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்தத் தற்கொலைக் குறிப்பில், தனது மாமனார் தங்களுக்குரிய சொத்துகள் அனைத்தையும் ரிங்கு என்ற மற்றொரு மகனுக்கே கொடுக்க விரும்புவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு இடையே பாகுபாடு காட்டக் கூடாது என்றும், சொத்துகள் அனைத்தும் பறிபோனால் தன் குழந்தைகளின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என்றும் அவர் வேதனையுடன் எழுதியுள்ளார். அத்துடன் தனது மூத்த மைத்துனி தன் மீது செய்வினை அல்லது பில்லி சூனியம் வைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வாரிசுகளுக்கு இடையே சொத்தைப் பிரிப்பதில் பெற்றோர்கள் காட்டும் அதீதப் பாகுபாடும், சுயநலமும் ஒரு குடும்பத்தையே எப்படி முழுமையாக அழிக்கக்கூடும் என்பதற்கு இந்த விபரீதச் சம்பவம் ஒரு சான்றாக மாறியுள்ளது.
