CRIME
முதல்வர் வீட்டின் பின்புறம்.. அரிசி பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை..! CCTV-யில் சிக்கிய தாய் மற்றும் மகள்.. நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம்..!!
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில் பொதுமக்கள் வழக்கம்போல் காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது குழந்தை அழும் சத்தம் கேட்டுள்ளது. அங்கே சென்று பார்த்தபோது, பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு ஒன்று 10 கிலோ அரிசி பையில் வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அப்போது அந்த பிரதான சாலையில் தமிழக முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் உடனடியாக அக்குழந்தையை மீட்டு, நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கும் மருத்துவமனைக்கும் விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். பின்னர் குழந்தை, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, அரசு குழந்தைகள் நலக் குழுமத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு, அங்கு மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து கபாலீஸ்வரர் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், நள்ளிரவில் இளம்பெண் ஒருவர் தன் தாயுடன் சாலைக்குச் சென்று, தாய் கை காட்டும் இடத்தில் குழந்தையை வைத்துவிட்டு அழுது கொண்டே திரும்பியது பதிவாகியிருந்தது. அதனடிப்படையில் குழந்தையின் தாய் மற்றும் பாட்டியை கண்டுபிடித்த அதிகாரிகள், அவர்களை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
