CRIME
“உச்சகட்ட கொடூரம்.. பாமாயில் ஊற்றி 86 வயது முதியவர் உயிரோடு எரிப்பு..” எதிர்வீட்டுக்காரரின் வெறிச்செயலால் உறைந்துபோன கன்னியாகுமரி..!!
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள திக்குறிச்சி மச்சிகாவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெபமணி. இவரது எதிர்வீட்டில் ஆல்பிரட் ஆஸ்பின் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே மது அருந்துவது தொடர்பாக ஏற்கெனவே முன்விரோதம் இருந்து வந்ததுடன், இது குறித்து காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்துள்ளது. இந்தச் சூழலில், நேற்று இரவு ஆல்பிரட் ஆஸ்பின், ஜெபமணியின் வீட்டு காம்பவுண்ட் சுவர் மற்றும் ஜன்னல் கதவுகளை உடைத்துச் சேதப்படுத்தியதோடு, தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.
இதனைத் தட்டிக்கேட்ட ஜெபமணியை ஆல்பிரட் ஆஸ்பின் தாக்க முயன்றதுடன், கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனால் அச்சமடைந்த ஜெபமணி, இது குறித்துப் புகார் அளிப்பதற்காக மார்த்தாண்டம் காவல் நிலையத்திற்குச் சென்றார். புகார் அளித்துவிட்டு மீண்டும் வீடு திரும்பியபோது, வீட்டிற்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் தனியாக இருந்த அவரது 86 வயது தந்தை குழந்தைவேல் உடல் முழுவதும் தீக்காயங்களுடன் எரிந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
ஜெபமணி காவல் நிலையம் சென்ற நேரத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஆல்பிரட் ஆஸ்பின், 86 வயது முதியவர் குழந்தைவேல் மீது துணிகளைப் போட்டு, அதன் மீது பாமாயிலை ஊற்றித் தீ வைத்துக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மார்த்தாண்டம் போலீசார், முதியவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்ட ஆல்பிரட் ஆஸ்பினைக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக முதியவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
