CRIME
“மதிய உணவு சரியில்லை..” புகார் அளித்த மாணவியை கதற கதற மிரட்டிய தலைமையாசிரியர்.. இணையத்தில் வைரலாகும் பெற்றோரின் கொந்தளிப்பு வீடியோ..!!
ஆந்திரப் பிரதேச மாநிலம் குண்டூர் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட அரசுப் பள்ளி ஒன்றில், வழங்கப்படும் மதிய உணவு தரமற்றதாக இருப்பதாக மாணவி ஒருவர் மாவட்டக் கல்வி அலுவலரிடம் துணிச்சலாகப் புகார் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் தெலுங்கு ஆசிரியர் ஆகியோர், அந்த மாணவியை கடுமையாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பள்ளி மாற்றுச் சான்றிதழ் கொடுத்துப் பள்ளியை விட்டு வெளியே அனுப்பிவிடுவோம் என அவர்கள் மிரட்டல் விடுத்ததால், அந்த மாணவி மிகுந்த அச்சமடைந்து கதறி அழுதுள்ளார்.
இந்தத் தகவலறிந்து பள்ளிக்கு விரைந்து வந்த மாணவியின் பெற்றோரை, பள்ளி ஊழியர்கள் உள்ளே அனுமதிக்காமல் பள்ளியின் பிரதானக் கதவைப் பூட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் அடிப்படை உரிமையான தரமான உணவைக் கேட்டதற்காகப் பள்ளி நிர்வாகமே மாணவியை அச்சுறுத்தி, பெற்றோரையும் தடுத்து நிறுத்தியுள்ள நிகழ்வு ஆந்திரப் பிரதேசப் பள்ளிகளின் நிர்வாகச் செயல்பாடுகள் குறித்துப் பலத்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
