LATEST NEWS
அய்யோ காப்பாத்துங்க..! சொகுசுப் படகு மீது மோதிய ராட்சத டேங்கர் கப்பல்.. உயிர் பிழைக்கத் தண்ணீரில் தத்தளித்த பயணிகள்… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் மிசிசிபி நதிக்கரையில் நின்றுகொண்டிருந்த சொகுசுப் படகுடன் டேங்கர் கப்பல் மோதிய கோர விபத்தில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கன் க்ரூஸ் லைன்ஸுக்குச் சொந்தமான ‘சிட்டி ஆஃப் நியூ ஆர்லியன்ஸ்’ என்ற அந்த சொகுசுப் படகில் சுமார் 180 முதல் 190 பயணிகள் பயணம் செய்தனர். உள்ளூர் நேரப்படி மதியம் 12:30 மணியளவில் நடைபெற்ற இந்த விபத்தில், ‘அட்லாண்டிக் அஸ்பால்ட்’ என்ற டேங்கர் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த சொகுசுப் படகு மீது மோதியதாக நியூ ஆர்லியன்ஸ் மேயர் ஹெலினா மொரினோ தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோவில் மோதலுக்குப் பிறகு பயணிகள் கப்பல் ஒரு பக்கமாகச் சாய்வதும், உயிர் காக்கும் கவச உடை அணிந்த பல பயணிகள் தண்ணீரில் தத்தளிப்பதும் பதிவாகியுள்ளது. இந்த எதிர்பாராத விபத்தால் பயணிகளிடையே கடும் பீதி ஏற்பட்டதுடன், தங்களது உடைமைகளைக் கூட எடுக்க முடியாமல் அவசரமாகக் கப்பலை விட்டு வெளியேறினர். விபத்தை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 பேரில் யாருக்கும் எந்தவொரு ஆபத்தான அல்லது பலத்த காயங்களும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்தில் சொகுசுப் படகில் பயணம் செய்த அனைத்து பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாக மேயர் ஹெலினா மொரினோ செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு அமெரிக்க செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் பல தொண்டு நிறுவனங்கள் இணைந்து தங்குமிடம், போக்குவரத்து, அவசர மருத்துவ உதவிகள் மற்றும் மனநல ஆதரவை வழங்கி வருகின்றன. மேலும், செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்கள் மீட்புக் குழுவினருடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்குக் குடிநீர், போர்வை போன்ற அடிப்படை வசதிகளை வழங்கி வருகின்றனர்; டேங்கர் கப்பல் எவ்வாறு கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
