CRIME
“உங்கள் மகன்களின் உயிருக்கு ஆபத்து..” முதிய தம்பதியை மிரட்டி… சாம்பலை உண்ணக் கொடுத்து 10 ஆண்டுகளில் ரூ. 6.38 கோடியை சுருட்டிய மாந்திரீக கும்பல்.. மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!
மும்பையின் தஹிசர் பகுதியில், மூடநம்பிக்கை மற்றும் மாந்திரீகத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி ஓய்வு பெற்ற முதிய தம்பதியினரிடம் சுமார் 10 ஆண்டுகளாகப் படிப்படியாக ரூ. 6.38 கோடி மோசடி செய்த கும்பலின் அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2016-ம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த தாரா மேத்தா மற்றும் அவரது மனைவி பார்சிஸ் மேத்தா ஆகியோரை அணுகிய உமேஷ் தேஷ்பாண்டே தலைமையிலான 10 பேர் கொண்ட கும்பல், அவர்களது வீட்டில் வாஸ்து குறைபாடும் சூனியமும் இருப்பதாகக் கூறிப் பயமுறுத்தியுள்ளது. ஹைதராபாத் மடாலயத்தின் 108 வயது ‘குருவர்யா’ எனக் குரலை மாற்றிப் பேசியும், கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கியும் அந்தத் தம்பதியினரை முழுமையாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர். வீட்டில் அகோரி பூஜைகள் செய்தும், நேபாள சாதுவின் சாம்பல் மற்றும் குங்குமத்தை உண்ணக் கொடுத்தும், சொத்துக்களைத் தூய்மைப்படுத்தாவிட்டால் கணவர் மற்றும் இரண்டு மகன்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மிரட்டி, அவர்களது 4 அடுக்குமாடிக் குடியிருப்புகள் 1,200 கிராம் தங்கம், ரூ. 1.60 கோடி மதிப்பிலான பங்குகள், வங்கி வைப்புத்தொகை மற்றும் வீட்டுத் தளபாடங்கள் வரை அனைத்தையும் சுருட்டியுள்ளனர்.
இதுமட்டுமின்றி, மடாலயம் கட்டுவதாகக் கூறி அதிக வட்டிக்கு ரூ. 45 லட்சம் கடன் வாங்க வைத்து, அதற்காக அந்தத் தம்பதியினரை ரூ. 90 லட்சம் வரை திருப்பிச் செலுத்த வைத்தும் அக்கும்பல் சுரண்டியுள்ளது. சொத்துக்கள் அனைத்தையும் இழந்து கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய அந்தத் தம்பதியினர், 2025 ஜூன் மாதம் ஹைதராபாத் செல்வதற்காகத் தங்கள் அண்டை வீட்டுக்காரரிடம் வெறும் ரூ. 24,000 கடன் கேட்டபோதுதான் இந்த 10 ஆண்டுகால மெகா மோசடி அம்பலமானது. பாதிக்கப்பட்ட பார்சிஸ் மேத்தா அளித்த புகாரின் பேரில், நவம்பர் 13, 2026 அன்று உமேஷ் தேஷ்பாண்டே உள்ளிட்ட 10 பேர் மீது தஹிசர் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே வேறொரு வழக்கில் சிறையில் உள்ள முக்கியக் குற்றவாளி உமேஷ் தேஷ்பாண்டே மற்றும் அவரது கூட்டாளிகள், மோசடிப் பணத்தில் கோரேகான் பகுதியில் வாங்கிக் குவித்துள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் குறித்து காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
