LATEST NEWS
“கண்ணியம் பற்றிப் பேசுறது இருக்கட்டும்.. முதலில் உங்கள் கட்சியினருக்குப் பாடம் எடுங்கள்… மறைவிலும் அரசியல் குதூகலமா..?” ஸ்டாலினுக்கு தவெக ஐடி விங் காட்டமான பதிலடி..!!
கொளத்தூர் தொகுதியின் தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர் திரு. வி.எஸ்.பாபு அவர்கள் காலமானதைத் தொடர்ந்து, அவரது மறைவைக் கொண்டாடும் வகையில் கருத்துகள் பரவுவதாகத் தவெக ஐடி விங் சார்பில் கடுமையான கண்டனக் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஒருவரது மறைவுக்குப் பிறகும் சிலர் நாகரிகமற்ற முறையில் நடந்து கொள்வது வேதனையளிப்பதாகவும், இந்தச் செயல்கள் மனிதநேயத்திற்கு எதிரானவை என்றும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கண்ணியம் மற்றும் மாண்பு குறித்துப் பேசுவதற்கு முன்பு, திரு. ஸ்டாலின் முதலில் தனது கட்சியினருக்கு உரிய பாடம் எடுக்க வேண்டும் எனத் தவெக ஐடி விங் தரப்பில் காட்டமான விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன. அரசியல் விமர்சனங்களைத் தாண்டி, இறப்பு போன்ற துயரமான நேரங்களில் கூட சிலர் இப்படி நடந்து கொள்வது ஏற்கத்தக்கதல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒருவரது இறப்பிலும் அரசியல் குதூகலம் காணும் இந்தப் போக்கை மக்கள் கவனித்து வருவதாகவும், இதற்கான உரிய பாடத்தை திமுக விரைவில் கற்கும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் ஐடி விங் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது. இந்தக் கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளன.
