CRIME
திக் திக் நிமிடங்கள்.. திடீரென வெடித்த நோயாளியின் மொபைல் போன் வெடித்த கொடூரம்.. அலறியடித்து ஒட்டிய மக்கள்.. வைரலாகும் திகில் வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஒரு தனியார் குழந்தைகள் மருத்துவமனையில், நோயாளி ஒருவரின் கையில் இருந்த மொபைல் போன் திடீரென வெடித்துச் சிதறி தீப்பற்றிய பதைபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. குவாலியரின் தாட்டிப்பூர் சௌஹான் பியாவ் பகுதியில் டாக்டர் அசுதோஷ் சர்மா என்பவருக்குச் சொந்தமான ‘திருஷ்டி ஸ்கின் அண்ட் சைல்டு கிளினிக்’ இயங்கி வருகிறது. நேற்று மதியம், இந்த கிளினிக்கின் காத்திருப்பு அறையில் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அமர்ந்திருந்தபோது, அங்கு வந்திருந்த ஒரு இளைஞரின் மொபைல் போனில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி, அடுத்த சில நொடிகளில் அது வெடித்துச் சிதறியுள்ளது.
மொபைல் வெடித்த அதிர்ச்சியில் அந்த வாலிபர் போனை அங்கிருந்த சோபாவின் மீது வீசியதால் உடனடியாக தீப்பற்றி எரியத் தொடங்கியது. அந்தச் சமயத்தில் கிளினிக்கிற்குள் பல நோயாளிகளும், சில கைக்குழந்தைகளும் இருந்ததால், திடீர் வெடிச்சத்தத்தாலும் புகையினாலும் பயந்துபோன மக்கள் அலறியடித்துக்கொண்டு வாசலை நோக்கி ஓடினர். இருப்பினும், அங்கிருந்த மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாகச் சாதுரியமாகச் செயல்பட்டு, எரியும் போனின் மீது தண்ணீரை ஊற்றியும், தீயணைப்பு பவுடரைத் தூவியும் தீயை அணைத்துக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். ஊழியர்களின் இந்த துரித நடவடிக்கையால் ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதோடு, அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை
