LATEST NEWS
“எனது அன்பான கரப்பான்பூச்சிகளுக்கு வாழ்த்துகள்..! இளைஞர்களின் வெற்றியை கொண்டாடிய நடிகர் பிரகாஷ் ராஜ்..!!”
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் தேர்வு முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையொட்டி, சிஜேபி அமைப்பின் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற போராட்டம் வெற்றி பெற்றுள்ளது. மத்திய அமைச்சரின் இந்த விலகலை நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் வரவேற்றுள்ளார். இதுகுறித்துத் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரகாஷ் ராஜ், “எனது அன்பான ‘கரப்பான்பூச்சிகளுக்கு’ வாழ்த்துகள்! சோனம் வாங்சுக் மற்றும் இளைஞர்களின் பக்கம் நின்ற அனைவருக்கும் நன்றிகள்; ஒரு சர்வாதிகார ஆட்சியைக்கூட உங்களால் மண்டியிட வைக்க முடியும் என்பதை நிரூபித்துவிட்டீர்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
ஜந்தர் மந்தரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நேரில் பங்கேற்றார். குறிப்பாக, 23 நாட்களாகத் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 3 மாணவர்களை, பாலிவுட் மூத்த நடிகை ஷாபனா அஸ்மியுடன் இணைந்து நேரில் சென்று சமாதானம் செய்து உண்ணாவிரதத்தைக் கைவிடச் செய்தார். கல்வி அமைச்சரின் ராஜினாமாவை முதன்மை கோரிக்கையாகக் கொண்டு போராடிய நிலையில், இந்த விலகலை “ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி” என சிஜேபி நிறுவனர் அபிஜீத் திப்கே மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் வர்ணித்துள்ளனர். மேலும், வினாத்தாள் கசிவு மற்றும் மறுதேர்வு அழுத்தத்தால் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் சிஜேபி வலியுறுத்தியுள்ளது.
இதேபோல், மத்திய கல்வி அமைச்சரின் ராஜினாமாவை வரவேற்றுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இன்னும் இரண்டு முக்கியக் கோரிக்கைகள் எஞ்சியுள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார். நீட் தேர்வு குளறுபடிகளால் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கான இளைஞர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வன்முறையைப் பிரயோகித்த காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அந்த எஞ்சிய கோரிக்கைகள் ஆகும்.
