CRIME
“ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்..” ஆனால் சில மணிநேரங்களில் தாய்க்கு நேர்ந்த பேராபத்து.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் புதானில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 25 வயது இளம்பெண் ஏக்தா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். முசாஜக் காவல் எல்லைக்குட்பட்ட கரூலியா கிராமத்தைச் சேர்ந்த ராம்பாபு என்பவரை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த ஏக்தாவிற்கு, செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து தனியார் நர்சிங் ஹோம் ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு மூன்று பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. இதில் துரதிர்ஷ்டவசமாக ஒரு பெண் குழந்தை இறந்தே பிறந்தது. மற்ற இரு பெண் குழந்தைகளும் ஒரு ஆண் குழந்தையும் தற்போது மாவட்ட அரசு மகளிர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
பிரசவம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏக்தாவின் உடல்நிலை மோசமடைந்து, அவருக்குக் கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த குடும்பத்தினர் அவரை மேல் சிகிச்சைக்காக பரேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், புதன்கிழமை அன்று ஏக்தா பரிதாபமாக உயிரிழந்தார். ஏக்தாவுக்கு ஏற்கனவே ஒருமுறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த அவருக்கு ஸ்கேன் பரிசோதனையிலேயே 4 குழந்தைகள் இருப்பது தெரிந்திருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகளைப் பெற்றுத் தாய் உயிரிழந்த இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
