LATEST NEWS
“எங்களுக்குன்னு சொந்தமா ஒரு காரே இல்லீங்க..!” சட்டசபையில் உருக்கமாகப் பேசிவிட்டு… தேர்தல் பிரமாண பத்திரத்தில் தலைசுற்ற வைக்கும் கோடிகளைக்காட்டி மாட்டிய 3 எம்.எல்.ஏ.க்கள்..!!
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆளுக்கொரு காரும், கார் டிரைவர் மற்றும் வாகன செலவுக்கு ரூ.75,000 படிக்காசும் வழங்கப்படும் என சட்டமன்றத்தில் நேற்று முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு விதை காட்டுமன்னார்கோவில் விசிக எம்எல்ஏ ஜோதிமணியால் கடந்த வாரம் போடப்பட்டது. சட்டமன்றத்தில் அவர் வைத்த கோரிக்கையில், “நான் 250 கி.மீ. தொலைவில் இருந்து தான் சட்டமன்றத்துக்கு வருகிறேன். எனக்கு சொந்தமாக வண்டி வாகனம் கிடையாது. வாடகை வண்டியில் தான் வருகிறேன். தொகுதி மக்களை சந்தித்து மக்களுக்கு பணி செய்ய வேண்டிய அளவிற்கான வாகன வசதி இல்லை. ஒரு செயலாளரை கையில் வைத்துக் கொண்டு அவருக்கு ஊதியம் கொடுப்பதற்கு வசதி இல்லை. இப்படித்தான் இன்றைக்கு முக்கால்வாசி சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். எனவே வாகன வசதியும் மற்றவைகளும் செய்து கொடுக்க வேண்டும்” என்று பேசியிருந்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று சட்டசபையில் விதி எண் 110-இன் கீழ், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் கார், காருக்கு டிரைவர், வாகன படியாக மாதம் ரூ.75 ஆயிரம், அலுவலக பணிகளில் உதவி செய்ய உதவியாளரை நியமித்துக் கொள்ள மாதம் ரூ.25 ஆயிரம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு நன்றி தெரிவித்து பல எம்எல்ஏக்கள் பேசினர். குறிப்பாக மொடக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ சண்முகன், “INNOVA கார் கொடுத்தால் நன்றாக இருக்கும்” என்றார். பெரியகுளம் தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் பேசுகையில், “கல்லூரியில் காதல் தோல்வியடைந்த எனக்கு வேலையும் இல்லை காரும் இல்லை. முதல்வர் எனக்கு வேலை வழங்கினார். கார் இல்லாததால் ஆட்டோவில் வருகிறேன். இப்போது காரும் வழங்கியுள்ளார்” என்றார்.
இந்நிலையில் கார் கேட்ட விசிக எம்எல்ஏ ஜோதிமணி, இன்னோவா கார் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்ற தவெக எம்.எல்.ஏ சண்முகன், ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் ஆகிய மூவரும் தேர்தல் பிரமாண பத்திரத்தில் தாக்கல் செய்த அவர்களின் சொத்து மதிப்பு குறித்த விவரங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விசிக எம்எல்ஏ ஜோதிமணி தனது பிரமாண பத்திரத்தில், தனக்கு டொயோட்டா எட்டியோஸ் கார் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், மனைவியிடம் 25 லட்சம் மதிப்புடைய நகைகள் இருப்பதாகவும், தனக்கு 50 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டு, தனது மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 லட்சம் 47 ஆயிரம் என தெரிவித்துள்ளார். இன்னோவா கார் கேட்ட தவெக எம்.எல்.ஏ சண்முகன் தன்னிடம் டொயோட்டா, வோல்ஸ்வேகன், மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட 4 கார்கள் உள்ளதாகவும், தனது அசையும் சொத்து ரூ.6 கோடி 49 லட்சம், அசையா சொத்து ரூ.31 கோடி சேர்த்து மொத்த சொத்து மதிப்பு ரூ.37 கோடி 52 லட்சம் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆட்டோவில் வருகிறேன் என்று கூறிய தவெக எம்எல்ஏ சபரி ஐங்கரன் தன்னிடம் டாடா டிகோர் கார் இருப்பதாக பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மொத்த சொத்து மதிப்பு ரூ.72 லட்சத்து 76 ஆயிரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
