LATEST NEWS
“நாங்களே பெஞ்ச் மேல் ஏறி நின்னு கையைத் தூக்கியிருக்கோம்..!” எ.வ.வேலு அடித்த ஓப்பன் கமெண்ட்… வாய்விட்டுச் சிரித்த முதலமைச்சர் விஜய்.. கலகலப்பான சட்டசபை..!!
தமிழகச் சட்டமன்றத்தில் சபாநாயகரின் கவனத்தை ஈர்ப்பது தொடர்பாக திமுக கொறடா எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பேசிய சுவாரசியமான கருத்துக்கள் அவையில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியதோடு, அதனைக் கேட்டு முதலமைச்சர் விஜய் புன்னகைத்தபடி ரசித்துள்ளார். சபை விவாதத்தின் போது, உறுப்பினர்கள் ஒரே நேரத்தில் பலராக எழுந்து நின்று கூச்சல் போடாமல் இருக்கையை விட்டு ஓடி வருவதைத் தவிர்க்க வேண்டும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அறிவுறுத்தினார். இதற்குப் பதிலளித்த எ.வ.வேலு, “முன்பெல்லாம் சபாநாயகரின் கவனத்தை ஈர்க்க உறுப்பினர்கள் சத்தமிடுவார்கள், ஏன்… நாங்களே இதே பேரவையில் பெஞ்ச் மேல் ஏறி நின்று இரண்டு கைகளையும் தூக்கிக் கவனத்தை ஈர்த்துள்ளோம்” என்று கடந்த கால நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, “இத்தனை காலமாகச் சபையில் கையை உயர்த்தினால் மட்டுமே சபாநாயகர் கவனிப்பார் என்று நினைத்தோம். ஆனால் பெஞ்ச் மேல் ஏறி நின்றும் சபாநாயகர் கவனத்தை ஈர்க்கலாம் என்ற அரிய புதிய வழிமுறையை அண்ணன் எ.வ.வேலு இன்றுதான் எங்களுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். அதற்குச் சபாநாயகர் பிரபாகர், “பெஞ்ச் மேல் ஏறி நிற்கும் தண்டனையை நான் யாருக்கும் வழங்க மாட்டேன்” என்று பதிலடி கொடுக்க, அவையே கலகலப்பானது. திமுக மூத்த தலைவர்களின் இந்தச் சினிமா பாணி கலகலப்பான விவாதத்தைக் கேட்டு முதலமைச்சர் விஜய் தனது இருக்கையில் அமர்ந்தபடி தொடர்ந்து புன்னகையுடன் கவனித்த இந்த நிகழ்வு தற்பொழுது சோசியல் மீடியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.
