CRIME
அடக்கடவுளே..! நான் தேர்தலில் நிற்க வேண்டும்..” தடுத்த மகன் மருமகளை காரால் ஏற்றி கொன்ற தந்தை.! கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய கொடூரச் சம்பவம்..!!
ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தின் சங்கோய் கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தலில் சர்பஞ்ச் பதவிக்குப் போட்டியிடுவதில் ஏற்பட்ட மோதலால் ஒரு குடும்பமே சீரழிந்துள்ளது. சங்கோய் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான ராமசந்திர ஜாட் என்பவர் அக்கிராமத்தின் சர்பஞ்ச் தேர்தலில் போட்டியிட ஆசைப்பட்டார். ஆனால், அவரது ஒரே மகனான ரவீந்திரா (40) மற்றும் மருமகள் மகிந்த்ரா (35) ஆகியோர் அவரைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனத் தடுத்துள்ளனர். இதனால் குடும்பத்தில் பல நாட்களாகத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவும் வீட்டில் இது தொடர்பாக வாக்குவாதம் முற்றியதால், தம்பதியினர் வீட்டை விட்டு வெளியேறி ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள தங்களது எடைமேடை கடைக்குச் சென்றனர். அங்கு வந்த ராமசந்திரனுடன் மீண்டும் தகராறு ஏற்பட்டது.
வாக்குவாதத்திற்குப் பிறகு ரவீந்திராவும் மகிந்த்ராவும் அங்கிருந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, ராமசந்திரன் தனது பொலிரோ காரில் பின்தொடர்ந்து வந்து இருவர் மீதும் காரை ஏற்றிக் கொடூரமாகக் கொன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. தகவலறிந்த தாரானகர் காவல் துறை துணை எஸ்பி ரோஹித் சங்லா தலைமையிலான போலீசார், குற்றவாளியைக் கைது செய்து கொலையுறுத்த பயன்படுத்தப்பட்ட பொலிரோ காரைப் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த மகிந்த்ராவின் தந்தை அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, புதன்கிழமை தாரானகர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராமசந்திரனை, மகிந்த்ராவின் வீட்டார் புகுந்து சரமாரியாகத் தாக்கினர். பின்னர் காவல்துறையினர் தலையிட்டு அவரை மீட்டனர்.
கிராமப் பஞ்சாயத்து கட்டிடத்தில் வாடகைக்குக் கடை எடுத்து ஈ-மித்ரா சேவை மையம் நடத்தி வந்த ரவீந்திராவிற்கும் மகிந்த்ராவிற்கும் 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இவர்களுக்கு 11 வயதில் மிகாரிகா என்ற மகள் உள்ளார். பெற்றோர் இருவரையும் ஒரே நேரத்தில் இழந்த அந்தச் சிறுமி இப்போது அனாதையாக நிற்கிறாள். வரும் நவம்பர் 16-ஆம் தேதி சங்கோய் கிராமத்தில் நான்காம் கட்ட உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், சர்பஞ்ச் ஆசையால் பிறந்த இந்த மோதல் இரண்டு உயிர்களைப் பறித்து முழு கிராமத்தையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
