LATEST NEWS
அண்ணன் டூ காதலன்…! கோபத்தில் மகளுக்கு உருவ பொம்மை செய்து இறுதிச்சடங்கு நடத்திய தந்தை.. கடைசியில் புதுப்பெண் கொடுத்த பதிலடி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் , கடந்த 15 ஆண்டுகளாகத் தான் அண்ணனாக நினைத்து ராக்கி கயிறு கட்டி வந்த பக்கத்து வீட்டு இளைஞரை, 20 வயது இளம்பெண் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரயாக்ராஜின் யமுனாநகர் பகுதியில் உள்ள தெலுவாவன் கிராமத்தைச் சேர்ந்த நந்தினி பாண்டே என்ற பெண், தனது அண்டை வீட்டில் வசிக்கும் 22 வயது சாஸ்வத் குப்தா என்பவரைக் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்துகொண்டார்.
இளைஞர் சாஸ்வத் நீண்ட நாட்களாக நந்தினியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். நந்தினி அவரைத் தனது சொந்த சகோதரனாகக் கருதி கடந்த 15 ஆண்டுகளாக ராக்கி கட்டி வந்துள்ளார். இவர்களது பந்தம் எப்போது காதலாக மாறியது என்று குடும்பத்தினருக்குத் தெரியாத நிலையில், கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி இருவரும் திடீரென காணாமல் போய் திருமணம் செய்துகொண்ட விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த நந்தினியின் தந்தை, தனது மகள் இறந்துவிட்டதாகக் கருதி, அவளது உருவ பொம்மையைச் செய்து எரியூட்டி இறுதிச் சடங்குகளை நடத்தினார். மேலும், மகளின் புகைப்படத்தில் ‘மறைந்த’ (சொர்க்கவாசி) என எழுதி குடும்ப உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்ட நந்தினி, தான் தனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே சாஸ்வத்தை மணந்ததாகக் கூறினார். தனது பெற்றோர் தனக்கு இறுதிச் சடங்கு செய்துவிட்டதால், தானும் தனது குடும்பத்துடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். மேலும், தனது தந்தை தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், தற்போது தனது கணவர் வீட்டார் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சம்பவம் தற்போது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
