LATEST NEWS
மாணவர்களுக்கு ஜாக்பாட்..! 95% மேல் மார்க் எடுத்தால் பஸ் பயணம் இலவசம்… போக்குவரத்து துறை மாஸ் அறிவிப்பு..!!
அபுதாபியில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிக்கூடங்கள் மீண்டும் திறக்கப்பட உள்ள நிலையில், மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அபுதாபி போக்குவரத்து துறை ஒரு புதிய அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைக்கும் மாணவ-மாணவிகளுக்குப் பொதுப் போக்குவரத்துப் பேருந்துகளில் ஆண்டு முழுவதும் இலவசமாகப் பயணம் செய்வதற்கான ‘இலவச பஸ் பயண அட்டை’ வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புச் சலுகையானது அனைத்து மாணவர்களுக்கும் பொருந்தாது; மாறாக, 2025-2026ஆம் கல்வியாண்டில் 95 சதவீதத்திற்கும் மேல் அதிக மதிப்பெண்களைப் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு மட்டுமே இந்த இலவசப் பயண அட்டை வழங்கப்படும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் மத்தியில் கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கவும், அவர்களின் கடின உழைப்பையும் சாதனைகளையும் கௌரவிக்கவும் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அபுதாபி போக்குவரத்துத் துறையின் இந்தத் திட்டம், அங்கு வசித்து வரும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கௌரவம் மாணவர்களை இன்னும் விறுவிறுப்பாகவும், போட்டி மனப்பான்மையுடனும் படிக்கத் தூண்டும் என்று சமூக ஆர்வலர்கள் இந்தத் திட்டத்திற்குப் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
