LATEST NEWS
ஓசூரில் அதிரடி..! ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய அரசு அதிகாரி கையும் களவுமாக கைது.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த தொழிலதிபர்..!!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், தொழிற்சாலைக்கான வணிக வரியை (ஜி.எஸ்.டி) திரும்பப் பெறுவதற்காகத் தொழிலதிபரிடம் ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கிய மாநில வரி அலுவலர் கலையரசன் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரால் வெள்ளிக்கிழமை இரவு கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்யப்பட்டார். ஓசூர் சிறு மற்றும் குறுந்தொழிற்சாலைகள் சங்கத்தின் முன்னாள் தலைவரான நம்பி, தனக்கு வர வேண்டிய ரூ.10 லட்சம் வரித் தொகையைத் திரும்பப் பெற விண்ணப்பித்திருந்தார். அப்போது ஓசூர் வடக்கு மண்டல அலுவலகத்தில் பணியாற்றி வந்த கலையரசன், அந்தத் தொகையை அனுமதிப்பதற்கு 20 சதவீதம் லஞ்சம் கேட்டுள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத தொழிலதிபர் நம்பி, இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். போலீஸாரின் ஆலோசனையின்படி, ரசாயனப் பவுடர் தடவிய ரூ.1 லட்சம் பணத்தை நம்பி, கலையரசனிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான கலையரசன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுத் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், சேலத்தில் உள்ள அவரது இல்லத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
