LATEST NEWS
அய்யோ கொடுமையே..! பிறந்தநாள் பார்ட்டிக்கு ஆடி காரை வாடகைக்கு எடுத்த 17 வயது சிறுவன்… அதிகாலையில் நேர்ந்த கோர விபத்து! கதறும் குடும்பத்தினர்..!!
டெல்லியின் கிஷன்கர் பகுதியில் அக்டோபர் 4ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் 17 வயது சிறுவன் ஓட்டி வந்த ஆடி கார் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து மூன்று வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. நண்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைன் செயலி மூலம் ரூ.16,000 செலுத்தி ஒரு இரவுக்கு வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த காரை, சிறுவன் அதிவேகமாகவும் கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த கொடூர விபத்தில் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த கிஷன்கரைச் சேர்ந்த உமாசங்கர் (45) என்ற நபர் படுகாயமடைந்து, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கிஷன்கர் போலீசார், காரை ஓட்டிய 17 வயது சிறுவனைப் பிடித்து, சிறார் நீதிக் குழுமத்தின் முன் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும், விபத்தில் தொடர்புடைய ஆடி கார் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 281 (கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல்), 106(1) (அலட்சியத்தால் மரணம் விளைவித்தல்) மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விபத்து நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
இச்சம்பவத்தில் ஓட்டுநர் உரிமம் இல்லாத 17 வயது சிறுவனுக்கு சொகுசு கார் எப்படி வாடகைக்குக் கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காரை வழங்கிய நிறுவனம் முன்பதிவு ஆவணங்கள், வயது மற்றும் ஓட்டுநர் உரிமத்தை சரியாகச் சரிபார்த்ததா என்பதை ஆய்வு செய்து வரும் போலீசார், நிறுவனத்தின் சார்பில் விதிமீறல் இருந்தது உறுதியானால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன் விபத்தின் போது காருக்குள் வேறு யாரேனும் இருந்தார்களா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
