LATEST NEWS
“என்னை திருடன்னு சொல்றாங்க” என்கிட்ட மன்னிப்பு கேட்குற வரை அதிமுக கூட்டத்துக்கு வர மாட்டேன்… கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறிய கே.சி.வீரமணி..!!
“என்னை திருடன் என்று சொல்கிறான்; அவன் என்னிடம் மன்னிப்பு கேட்கும் வரை எந்த அதிமுக கூட்டத்திற்கும் வரமாட்டேன்” என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஆக்ரோஷமாக கூறிவிட்டு கூட்டத்தில் இருந்து வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாணியம்பாடியில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகியான கே.சி.வீரமணிக்கும் மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் உச்சக்கட்டமாக இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் தன்னை பற்றி மாதனூர் மேற்கு ஒன்றிய செயலாளர் தொடர்ந்து அவதூறான கருத்துக்களையும், விமர்சனங்களையும் பரப்பி வருவதாக கே.சி.வீரமணி கூட்டத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டினார். தனக்கு எதிராக சொந்தக் கட்சிக்குள்ளேயே திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுவதை அனுமதிக்க முடியாது என்றும், இதற்கு காரணமானவர் நேரடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் பிடிவாதமாக வலியுறுத்தினார்.
உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் தலைமை நிர்வாகிகள் முன்னிலையிலேயே இந்த வாக்குவாதம் அரங்கேறியதால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சமரசம் செய்ய முயன்ற சக நிர்வாகிகளின் பேச்சை கேட்க மறுத்து, தனது ஆதரவாளர்களுடன் கே.சி.வீரமணி கூட்டத்தை புறக்கணித்து பாதியிலேயே வெளியேறியது வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அதிமுக வட்டாரத்தில் தற்பொழுது பெரும் புயலை கிளப்பியுள்ளது.
