LATEST NEWS
“கணக்குப்படி ₹4,800 கோடி வந்திருக்கணும்…” காலி பாட்டில் விவகாரத்தில் ₹2,000 கோடி மெகா ஊழல்… பொய் கணக்கை தோலுரித்த அமைச்சர்.. 3 இடங்களில் நடத்திய ஆய்வில் அம்பலமான பகீர் உண்மை..!!
காலி மதுபான பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தில் சுமார் 2,000 கோடி ரூபாய் அளவுக்குப் பெரும் முறைகேடு நடந்துள்ளதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் 99 சதவீத பாட்டில்கள் திரும்ப வந்துள்ளதாகக் கூறப்பட்ட கணக்கின்படி, அரசுக்கு மாதம் 400 கோடி வீதம், ஆண்டுக்குச் சுமார் 4800 கோடி ரூபாய் வந்திருக்க வேண்டும். ஆனால், அரசுத் தரப்பில் நடத்தப்பட்ட கள ஆய்வுகளில் அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளியாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசு சார்பில் மூன்று குறிப்பிட்ட இடங்களில் திடீர் ஆய்வு நடத்தியபோது, முறையே 54%, 57% மற்றும் 61% பாட்டில்கள் மட்டுமே திரும்பப் பெறப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் பாட்டில்கள் திரும்பப் பெறப்பட்டதாகக் கூறப்பட்ட போலி கணக்குகளின் பின்னணியில், கிட்டத்தட்ட 2,000 கோடி ரூபாய் அளவுக்குப் பாரிய மெகா ஊழல் அரங்கேறியிருப்பது அம்பலமாகியுள்ளது.
இந்த மெகா ஊழல் விவகாரம் தொடர்பாகத் தற்போது தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் விக்னேஷ் சட்டப்பேரவையில் உறுதிபடக் கூறியுள்ளார். மேலும், இந்த முறைகேட்டில் ஈடுபட்டு அரசுப் பணத்தைச் சூறையாடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும், கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
