LATEST NEWS
“உங்களையும் அப்பாவையும் ஒன்றாக பார்த்து 35 வருஷம் ஆச்சு..!” சோனியாவின் சுயசரிதை புத்தகக் குறிப்புடன்.. ராகுல் காந்தியின் கலங்க வைக்கும் பதிவு..!!
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள வீர் பூமி நினைவிடத்தில் அவரது மனைவி சோனியா காந்தி, மகனும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட உருக்கமான பதிவில், “அம்மா, உங்களையும் அப்பாவையும் ஒன்றாக நான் கடைசியாகப் பார்த்து 35 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. அப்பா விட்டுச் சென்ற நாளிலிருந்து, அத்தனை சவால்களையும் நீங்கள் ஒருபோதும் தளராத துணிச்சலுடனும் கண்ணியத்துடனும் எதிர்கொண்டதை நான் பார்த்திருக்கிறேன். நீங்கள் என்னென்ன துயரங்களைச் சந்தித்தீர்கள் என்பதையும், அப்பாவுக்குப் பிறகு உங்கள் வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தது என்பதையும் உண்மையாக அறிந்தவர்கள் பிரியங்காவும் நானும் மட்டுமே” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தனது பதிவில், “‘Belonging: A Journey of Love’ என்ற உங்கள் சுயசரிதை, உங்களை நேசிக்கும் கோடிக்கணக்கான மக்களால் படிக்கப்பட உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். இன்று, அப்பாவின் பிறந்தநாள், அவர் புன்னகையுடன் தனது அழகான சோனியாவைப் பெருமிதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிகிறது” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தனது சுயசரிதையை வரும் நவம்பரில் வெளியிடவுள்ள நிலையில், அதில் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் குடும்பங்களில் ஒன்றில் திருமணம் செய்துகொண்டது, தனது கணவர் ராஜீவ் காந்தியை இழந்த சோகம் தன்னை ‘அரசியலின் பொது உலகிற்குள்’ தள்ளியது மற்றும் 2004-ல் பிரதமர் பதவியை நிராகரித்தது உள்ளிட்ட தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். “பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்” என்ற இந்தப் புத்தகம் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என பெங்குயின் ரேண்டம் ஹவுஸின் அமெரிக்கப் பதிப்பகமான ஆல்பிரட் ஏ நாப் அறிவித்துள்ளது.
