LATEST NEWS
“ரேஷன் கார்டு e-KYC விரல் ரேகை பதிவு செய்ய ஜூலை 31 தான் கடைசி தேதி.. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு…!!
தமிழ்நாட்டில் ரேஷன் கார்டு அட்டைதாரர்கள் அனைவரும் வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் தங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC எனப்படும் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக் கடைகளில் விநியோகிக்கப்படும் அத்தியாவசியப் பொருட்கள் தகுதியான பயனாளிகளுக்குச் சென்றடைவதை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தவிர்க்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பினர்களும் தங்களின் கைவிரல் ரேகையைப் பதிவு செய்வது அவசியம்; தவறும்பட்சத்தில் அந்த குறிப்பிட்ட உறுப்பினரின் பெயர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
பணி அல்லது பிற காரணங்களுக்காகத் தற்காலிகமாக வெளியூரில் வசிப்பவர்கள், தங்களின் சொந்த ஊருக்குச் செல்லத் தேவையில்லாமல், தற்போது தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள எந்தவொரு நியாயவிலைக் கடையிலும் இந்த விரல் ரேகையைப் பதிவு செய்து கொள்ளலாம். கைரேகை சரியாகப் பதியாத குழந்தைகள் மற்றும் முதியவர்கள், முதலில் தங்களின் பயோமெட்ரிக் விவரங்களை அருகில் உள்ள ஆதார் சேவை மையங்களில் புதுப்பிக்க வேண்டும். மேலும், குடும்ப அட்டையில் பெயர் உள்ளவர்கள் எவரேனும் ஏற்கனவே உயிரிழந்திருந்தால், அவர்களின் பெயர்களை உடனடியாக நீக்குவதற்கு உரிய ஆவணங்களுடன் வட்ட வழங்கல் அலுவலகத்தையோ அல்லது ரேஷன் கடை விற்பனையாளரையோ அணுகுமாறு மாவட்ட ஆட்சியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
