LATEST NEWS
“கருவை கலைச்சிரு” குழந்தைக்கு இதயம் வளர்ச்சி இல்ல… வாடகைத்தாயிடம் பெற்றோர் சொல்லியும் மறுப்பு… குழந்தை வளர்ப்பு உரிமையில் அரங்கேறிய டுவிஸ்ட்… நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
அமெரிக்காவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள முயன்ற பெற்றோருக்கும், குழந்தையைச் சுமந்த வாடகைத் தாய்க்கும் இடையே ஏற்பட்ட குழந்தை உரிமைப் போராட்டம் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பரபரப்பான முடிவுக்கு வந்துள்ளது. கலிபோர்னியா மாகாணத்தைச் சேர்ந்த ஓமர் அகமது – நெளஷீன் கில்கர் தம்பதியினர், செவிலியரான மெக்கென்னா வெஸ்ட் என்ற பெண்ணை வாடகைத் தாயாக ஒப்பந்தம் செய்து கொண்டனர். அந்த ஒப்பந்தத்தில், வளரும் சிசுவுக்கு ஏதேனும் கடுமையான குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டால், கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்ற விதிமுறையும் சேர்க்கப்பட்டிருந்தது.
அதன்படி சிசுவின் 20-வது வாரத்தில் நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், குழந்தைக்கு இடது பக்க இதயம் முழுமையாக வளர்ச்சியடையாத தீவிர இதய நோய் குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் குழந்தைக்குப் பிறந்த உடனே அறுவை சிகிச்சைகள் செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால், உயிரியல் பெற்றோர்கள் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியுள்ளனர். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த வாடகைத் தாய் மெக்கென்னா வெஸ்ட், குழந்தையைத் தானே வளர்த்துக் கொள்வதாகக் கூறி, கருக்கலைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள டெக்சாஸ் மாகாணத்திற்குத் தப்பிச் சென்று ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.
இதனைத் தொடர்ந்து குழந்தையின் உயிரியல் பெற்றோர்கள் டெல்லாஸ் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த டெல்லாஸ் நீதிமன்றம், வாடகைத் தாய் மாகாணத்தை விட்டு வெளியேற தடை விதித்ததோடு, குழந்தைக்குத் தேவையான அனைத்து உயிர் காக்கும் சிகிச்சைகளையும் வழங்க உத்தரவிட்டது. மேலும், பிறந்துள்ள குழந்தைக்கு அதன் உயிரியல் பெற்றோர்களே முழுப் பொறுப்பானவர்கள் என்று அறிவித்த நீதிபதி, வாடகைத் தாய்க்கு குழந்தை மீதான அனைத்து சட்டப்பூர்வ உரிமைகளையும் அதிகாரத்தையும் தடை செய்து அதிரடி தீர்ப்பளித்தார்.
