LATEST NEWS
“அதெல்லாம் பொய் பாஸ்” Defender கார் இருக்கும்போது… சட்டசபைக்கு ஆட்டோவுல வர்றதா சொன்னது ஏன்..? செய்தியாளர்கள் கேள்விக்கு MLA சபரி ஐங்கரன் கொடுத்த பதில்…!!
சட்டப்பேரவைக்குத் தான் ஆட்டோவில் வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரப்பப்படும் இத்தகையத் தகவல்களை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் தவெக சட்டமன்ற உறுப்பினர் சபரி ஐங்கரன் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு அரசு சார்பில் வாகனம் வழங்குவது தொடர்பான விவாதத்தின் போது பேசிய அவர், தமக்கு முன்பு வேலையும் இல்லை, காரும் இல்லை என்றும், தற்போது முதலமைச்சர் விஜய் வேலை மற்றும் கார் கொடுத்திருப்பதாகக் கூறி நன்றி தெரிவித்தார். மேலும், தான் தொடர்வண்டியிலும் ஆட்டோவிலும் வருவதால், பாதுகாப்புப் பணியில் இருக்கும் காவலர்கள் தன்னை எம்.எல்.ஏ என்று நம்ப மறுப்பதாக அவர் அவையில் பேசியது பேசுபொருளானது.
இதனைத் தொடர்ந்து, அவரிடம் செய்தியாளர்கள், “உங்களிடம் Defender கார் இருப்பதாக வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளீர்கள், வங்கியில் ரூ.30 லட்சம் வைப்புத்தொகை உள்ளதாகவும் தெரிவித்துள்ளீர்கள், அப்படியிருக்க ஆட்டோவில் தான் வருகிறேன் என்று எப்படிச் சொல்கிறீர்கள்?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். இக்கேள்விகளுக்குப் பதிலளித்த பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி ஐங்கரன், “தயவுசெய்து சமூக வலைதளங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய வதந்திகளைப் பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம்” என்று மட்டும் கூறிவிட்டு, தனது காரைப்பற்றிய நேரடி விளக்கங்களைத் தவிர்த்து அவ்விடத்திலிருந்து நகர்ந்தார். இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
