LATEST NEWS
இப்படி ஒரு பாசமா..? “என் தங்கச்சி இல்லாத உலகத்துல நானும் இருக்க மாட்டேன்…” கதறித் துடித்த அக்கா எடுத்த விபரீத முடிவு..! ஒரே நாளில் பறிபோன 6 உயிர்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்தில் இரு வேறு சம்பவங்களில் இரண்டு சகோதரிகளும் அவர்களின் நான்கு குழந்தைகளும் கிணற்றில் குதித்து உயிரிழந்த சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தத் துயரச் சம்பவத்தில் மொத்தம் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், காவல் துறையினர் இது குறித்துத் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நாளில் நிகழ்ந்த இந்தச் சம்பவங்களால் இரு குடும்பங்களும் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளன.
முதல் சம்பவத்தில், அஞ்சலி என்ற பெண் புதன்கிழமை மதியம் சுமார் 1 மணி அளவில் தனது 6 வயது மகன் பிரஷாந்துடன் கிணற்றில் குதித்துள்ளார். அச்சமயத்தில் அவருடன் இருந்த அவரது மூன்று மகள்களில், மூத்த மகள் மோனிகா தைரியமாகச் செயல்பட்டுத் தன்னையும் தனது இரு தங்கைகளையும் காப்பாற்றிக் கொண்டு வீட்டிற்குச் சென்று தகவல் தெரிவித்துள்ளார். உறவினர்கள் விரைந்து வந்து அஞ்சலியையும் அவரது மகனையும் கிணற்றிலிருந்து மீட்டபோதிலும், இருவருமே ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர். எட்டு மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலியின் மரணத்தால், அவரது வயிற்றில் வளர்ந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.
இதையறிந்த அஞ்சலியின் மூத்த சகோதரியான சீதா ராவத் (40), தங்கை இறந்த அதிர்ச்சியிலும் துயரத்திலும் தனது மூன்று குழந்தைகளான ராக்கி (14), பிரியங்கா (11) மற்றும் ஷ்லோக் (6) ஆகியோருடன் கோங்கர் கிராமத்தில் உள்ள வயலில் இருந்த கிணற்றில் குதித்துள்ளார். மாலையில் அவர்கள் வீடு திரும்பாததால் தேடிச் சென்ற குடும்பத்தினர், கிணற்றில் சடலம் மிதப்பதைக் கண்டு காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த கோலாரஸ் காவல் துறையினர், புதன்கிழமை இரவு 11 மணிக்குள் சீதா மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் சடலங்களையும் கிணற்றிலிருந்து மீட்டனர். இந்த இரு சம்பவங்கள் குறித்தும் காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
