‘என்னை உடனே டிஸ்சார்ஜ் பண்ணுங்க’.. மருத்துவமனையில் இருந்து வாங்சுக் விடுத்த பகீர் வேண்டுகோள்.. பரபரக்கும் அரசியல் களம்..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

‘என்னை உடனே டிஸ்சார்ஜ் பண்ணுங்க’.. மருத்துவமனையில் இருந்து வாங்சுக் விடுத்த பகீர் வேண்டுகோள்.. பரபரக்கும் அரசியல் களம்..!!

Published

on

நீட் வினாத்தாள் கசிவு மற்றும் சிபிஎஸ்சி விடைத்தாள் திருத்த குளறுபடி உள்ளிட்ட நிர்வாகத் தோல்விகளுக்குப் பொறுப்பேற்று, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாகத் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அபிஜித் தீப்கே தலைமையிலான கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருடன் இணைந்து நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு இளைஞர் அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. குறிப்பாக, கல்வித் துறை சீர்திருத்தங்களை வலியுறுத்தி 20 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த பிரபல கல்வியாளர் சோனம் வாங்சுக், கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி காவல்துறையினரால் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டு சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போதைய நிலையில் அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு, நாடாளுமன்றப் பேரணியில் பங்கேற்க ஏதுவாகத் தன்னை டிஸ்சார்ஜ் செய்யுமாறு சோனம் வாங்சுக் எக்ஸ் தளம் வாயிலாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதையொட்டி, ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்தப் போராட்டக்காரர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், இந்தப் பேரணிக்கு டெல்லி காவல்துறை தடை விதித்ததால், அங்கு கடுமையான பதற்றமும் மோதலும் வெடித்தன. போராட்டக்காரர்கள் காவல்துறையின் தடுப்புகளை (Barricades) மீறி முன்னேற முயன்றபோது, கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக டெல்லியின் முக்கியப் பகுதிகளில் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும் பேரணிகள் நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், நகரின் 5 முக்கிய மெட்ரோ நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இதனால் அன்றாடப் பணிகளுக்குச் செல்லும் பொதுமக்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.

Advertisement

இந்தத் தீவிரப் போராட்டங்களுக்கு இடையே, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் டெல்லி காவல்துறையினரால் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த அழைப்பு மிகவும் தாமதமாக வந்திருந்தாலும், கல்வி முறையில் உள்ள சீர்கேடுகளைத் தடுக்க தாங்கள் மத்திய அரசுடன் விவாதத்திற்குத் தயாராகவே இருப்பதாக சௌரவ் தாஸ் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கும் வரையோ, அல்லது இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கல்வித் துறைப் பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று உறுப்பினர்கள் உறுதியளிக்கும் வரையோ, மருத்துவமனையிலிருந்தபடியே தனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும் என்று சோனம் வாங்சுக் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in