CINEMA
“தமிழில் திறமைக்கு மரியாதையே இல்லை…!””சொந்த மண்ணுல கிடைக்காதது டோலிவுட்ல கிடைச்சிருச்சு…!” – கோலிவுட் இயக்குநர்களைக் கடுமையாக சாடிய வரலட்சுமி…!
தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி மற்றும் தவிர்க்க முடியாத நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி சரத்குமார், தான் தமிழ் சினிமாவை விட தெலுங்குத் திரையுலகில் அதிக கவனம் செலுத்துவதற்கான காரணத்தை அண்மைய பேட்டி ஒன்றில் ஓப்பனாகப் பகிர்ந்துள்ளார். வரலட்சுமி இயக்கி, நடித்த ‘எஸ். சரஸ்வதி’ என்ற திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் நேரடியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், அவரது இந்த அதிரடிப் பேச்சு கோலிவுட் மற்றும் டோலிவுட் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது திரைப்பயணத்தின் ஆரம்பகாலக் குழப்பங்கள் குறித்துப் பேசிய வரலட்சுமி, 2009-ல் தொடங்கப்பட்ட ‘போடா போடி’ திரைப்படம் 2012-ல்தான் வெளியானது என்றும், அந்த காலகட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அதன்பின்னர் தமிழில் பாலா இயக்கத்தில் ‘தாரை தப்பட்டை’, விஜய் உடன் ‘சர்க்கார்’ போன்ற முக்கிய படங்களில் நடித்தபோதிலும், தனது நடிப்புத் திறமைக்குத் தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்கள் தமிழில் தனக்கு அமையவில்லை என்றும், அதற்கான முயற்சிகளும் பலன் அளிக்கவில்லை என்றும் அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகம் குறித்துப் புகழ்ந்து பேசிய அவர், “அங்கு திறமைசாலிகளை மதிக்கிறார்கள்; அவர்களுக்காகவே பிரத்யேகமான, அழுத்தமான கதாபாத்திரங்களை உருவாக்குகிறார்கள். நடிகர்கள் மற்றும் நடிகைகள் குறித்து மிகவும் மரியாதையாக எழுதுகிறார்கள், ஆனால் தமிழில் அப்படி இல்லை” என்று சாடியுள்ளார். தமிழ்நாடு தனது சொந்த மண்ணாக இருந்தாலும், திறமைக்கான அங்கீகாரமும் மரியாதையும் கிடைக்கும் இடத்தில் இருப்பதுதானே சரியாக இருக்கும் எனக் கேள்வி எழுப்பியுள்ள வரலட்சுமி, இதனால்தான் தான் ஹைதராபாத்தில் வசிப்பதாகவும், விரைவில் தனது கணவரும் ஹைதராபாத்திற்கே குடிபெயர உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, ‘எஸ். சரஸ்வதி’ பட விளம்பரத்தின் போது பேசிய நடிகை ராதிகா சரத்குமார், தெலுங்கு திரையுலகில் கலைஞர்களுக்கு நல்ல மரியாதை கிடைக்கும் என்பதால் தான் தான் வரலட்சுமியை அங்கு செல்ல அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது வரலட்சுமியும் அதையே உறுதிப்படுத்தியுள்ளார். பெரிய கதாநாயகர்களுடன் டூயட் பாடினால் தான் மார்க்கெட் என்ற வழக்கமான பாணியை உடைத்து, “இந்தக் கதாபாத்திரத்திற்கு வரலட்சுமி தான் பொருத்தமானவர்; அவரது கால்ஷீட் கிடைக்கும் வரை காத்திருக்கலாம்” என்று இயக்குநர்களை வியக்க வைக்கும் ஒரு தனித்துவமான திறமைசாலியாக வரலட்சுமி வலம் வருவது குறிப்பிடத்தக்கது.
