CINEMA
“யாரோ அவன் மனச மாத்திட்டாங்க…!””அம்மா தப்புன்னு தோணுனா அப்புறம் உன் இஷ்டம்…” – மகன் ஸ்ரீஹரியிடம் கதறி அழுத வனிதா…!உருக்கமான பதிவு …!
பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா ஆகியோரின் மூத்த மகளான வனிதா விஜயகுமார், குடும்பத்தை பிரிந்து தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். எப்போதும் எதற்கும் அஞ்சாமல் தனது கருத்துக்களைத் தைரியமாகவும், துணிச்சலாகவும் பொதுவெளியில் முன்வைக்கும் குணம் கொண்ட அவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பம், தந்தை மற்றும் மகன் குறித்து மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியுள்ளார். குறிப்பாக, பல வருடங்களாகத் தன்னை விட்டுப் பிரிந்திருக்கும் தனது மகன் விஜய் ஸ்ரீஹரியுடன் அமர்ந்து பேச தனக்கு ஒரு வாய்ப்பு வேண்டும் என அவர் மனம் உருகிக் கேட்டுக்கொண்ட விஷயம் தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு வனிதா அளித்த பேட்டியில், தான் மீண்டும் தனது குடும்பத்தோடு சேர வேண்டும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், அவர்கள் தங்களை மாற்றிக் கொண்டால் மட்டுமே அதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் ஒரு மகளாக, சகோதரியாக வாழ்க்கையில் அனுபவித்த அத்தனை வேதனைகளுக்கும் கஷ்டங்களுக்கும் தனது தந்தை விஜயகுமார் தான் முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். “அம்மா மஞ்சுளா உயிரோடு இருந்தவரை குடும்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது; அவர் மறைவுக்குப் பின் வீட்டின் தலைவராக இருக்கும் அப்பா உறுதியாக இல்லாததால் ஒட்டுமொத்தமாக மாறிவிட்டார்” என்று வனிதா வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மகன் ஸ்ரீஹரி குறித்துப் பேசிய அவர், “அப்பாவால் நான் சந்தித்த துயரங்களை என் மகனுக்குத் தரமாட்டேன்; என் மகனை நான் ஒருபோதும் கைவிட மாட்டேன்” என்று உறுதியளித்துள்ளார். குடும்பப் பிரச்சினை நடந்த காலகட்டத்தில் யாரோ சிலர் தனது மகனின் மனதை மாற்றிவிட்டதாகக் குறிப்பிட்ட வனிதா, தற்போது வளர்ந்துவிட்ட அவனுக்கு ஒருநாள் அம்மாவின் அருமையும் உண்மையும் புரியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். “ஜஸ்டிபிகேஷன் கொடுப்பதற்காக அல்லாமல், உண்மையில் என்ன நடந்தது என்ற என்னுடைய பக்க நியாயத்தை அவன் என் வாயால் கேட்க வேண்டும்; அதன்பிறகும் அம்மா தவறு என்று அவன் நினைத்தால் அது அவன் முடிவு. ஆனால் என்னுடன் அமர்ந்து பேச அவனுக்கு ஒருநாள் நிச்சயம் தோன்றும்” என வனிதா மிகவும் உருக்கமாகக் கூறியுள்ளார் .
