LATEST NEWS
“முதலமைச்சர் விஜய் மீது கேஸ் போட முடியாது…விஜய் பிரச்சார வாகனம் மோதி இளைஞரின் கால் முறிவு…வழக்குப் பதிவு செய்ய மறுக்கும் போலீஸ்… தந்தை தீக்குளிக்கப் போவதாக அதிரடி எச்சரிக்கை…!
கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சார வாகனம் மோதி இளைஞர் ஒருவரின் கால் முறிந்த சம்பவத்தில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் மிரட்டுவதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு குற்றம் சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 20 அன்று மாதவரம் தொகுதியில் விஜய் பிரச்சாரம் மேற்கொண்ட போது, அவரைப் பார்க்கச் சென்ற செங்குன்றத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான பிரான்சிஸ் (25) என்ற இளைஞர் நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது விஜய்யின் பிரச்சார வாகனம் பிரான்சிஸின் காலில் ஏறியதில், அவருக்குப் பலத்த காயம் ஏற்பட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் குறித்து சோழவரம் காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியே புகார் அளிக்கப்பட்டும், காவல்துறையினர் இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை காவல் நிலையத்திற்குச் சென்று முறையிட்ட போது, “விஜய் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகிவிட்டார், எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்ய முடியாது” என போலீசார் கூறியதாகப் பாதிக்கப்பட்ட தரப்பு வேதனை தெரிவிக்கிறது. மேலும், மகனின் சிகிச்சைக்காக இதுவரை 2 லட்சம் ரூபாய்க்கும் மேல் செலவாகியுள்ள நிலையில், தவெக தரப்பில் 50 ஆயிரம் ரூபாய் தருவதாகவும், வழக்கை இத்துடன் முடித்துக் கொள்ளுமாறும் காவல்துறையினரே தங்களை மிரட்டுவதாக அந்தத் தந்தை குற்றம் சாட்டியுள்ளார்.
நீதி கிடைக்காத விரக்தியில், சென்னை தலைமைச் செயலகம் முன்பாகத் தீக்குளிக்கப் போவதாகப் பாதிக்கப்பட்ட இளைஞரின் தந்தை எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர்களின் வழக்கறிஞர் பேசுகையில், விபத்து தொடர்பாக முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே வாகனக் காப்பீடு (Insurance) மூலம் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்றும், ஆனால் போலீசார் முதலமைச்சரின் வாகனம் என்பதால் வழக்குப் பதிவு செய்ய மறுத்துச் சமாதானமாகப் போகச் சொல்லி மிரட்டுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். காவல்துறையின் இந்தச் செயல்பாட்டிற்கு எதிராக, பாதிக்கப்பட்ட இளைஞரின் குடும்பத்தினர் விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடிவு செய்துள்ளனர்.
