CINEMA
தமிழக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் பட தயாரிப்பாளர் நியமனம் – பல்வேறு தரப்பினர் மத்தியிலும் அதிகரிக்கும் எதிர்ப்பு!
நடிகர் விஜய் கடைசியாக நடித்த படம் ஜனநாயகன். இந்த படத்தை கன்னட தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் தயாரித்திருந்தது. தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா இந்த படத்தை தயாரித்திருந்தார். அவருக்கு தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக செயல்பட வேண்டிய ஒரு பதவியில் தமிழர் இல்லாத கன்னடர் வெங்கட் நாராயணாவை நியமித்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.
இவர் கர்நாடகா காங்கிரஸ் முதல்வர் உறவினர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 23ம் தேதி அவரது பதவிக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை அன்றே வெளியிடாமல் நேற்று வெளியிட்டதுக்கு என்ன காரணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த சூழ்நிலையில் கர்நாடகாவை சேர்ந்த ஒருவரை அதுவும் சினிமா தயாரிப்பாளரை இப்படிப்பட்ட பொறுப்பான முக்கியமான ஒரு பதவியில் நியமிப்பதா என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
