LATEST NEWS
விஜய் ஊதும் மகுடி.. மயங்கி விழும் எம்.எல்.ஏ-க்கள்.. 12 தொகுதியில் இடைத்தேர்தல்… அதிரடி கிளப்பும் ஆர்.பி.உதயகுமார்..!!
தமிழக வெற்றிக் கழக அரசுக்கு பெரும்பான்மை பலத்தை உருவாக்குவதற்காக, 12 சட்டமன்றத் தொகுதிகளுக்கு மொத்தமாக இடைத்தேர்தல் நடத்த முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். தற்போதைய அரசியல் சூழலில் காற்று த.வெ.க பக்கம் வீசுவதால், பிற கட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தொடர்ந்து முதல்வர் விஜய் ஊதும் மகுடிக்கு மயங்கி அக்கட்சியில் இணைந்து வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கரூர் விஜயபாஸ்கர், தற்போது முதல்வர் விஜய்யின் மகுடிக்கு மயங்கி த.வெ.க-வில் இணைந்துள்ள 6-வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகளை இப்படி கட்சி மாறுவது ஒரு ஜனநாயக கேலிக்கூத்து என்றும், கோவில் திருவிழாவில் பிள்ளை பிடிப்பவர்களுக்கும், ஜனநாயக திருவிழாவில் எம்.எல்.ஏ-க்களை பிடிப்பவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் தனது அறிக்கையில் சாடியுள்ளார்.
எம்.எல்.ஏ-க்கள் கட்சி மாறுவது போன்ற தற்போதைய அரசியல் அலங்கோலங்களைக் கண்டு தமிழ் சமூகம் இப்போது அமைதியாக இருந்தாலும், விரைவில் துணிச்சலான முடிவைத் தரும் என அவர் எச்சரித்துள்ளார். அரசியல் காற்று எப்போதும் ஒரே திசையில் வீசாது என்றும், திசை மாறும்போது ஜனநாயகத்தின் உண்மையான வலிமை என்னவென்று விஜய்க்குப் புரியவரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இத்தகைய ஜனநாயக கேலிக்கூத்துகளை நடத்தும் ஆணவம் அழிவைத் தரும் என்பதை சுட்டிக்காட்டி அவர் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
