LATEST NEWS
“யார் அந்த கருப்பு ஆடு..?” கோட்டை ரகசியங்கள் லீக்… தவெக ஆட்சியில் கசியும் உளவுத்துறை ரிப்போர்ட்… பின்னணியில் திமுக விசுவாசிகள்..? அதிர்ச்சியில் விஜய் தலைமை..!
புதிய ஆட்சி அமைந்தவுடன் தமிழக வெற்றி கழகத்தின் மிக முக்கிய உளவுத்துறை தகவல்கள் மற்றும் ரகசிய ஆலோசனைகள், ஆளுங்கட்சிக்குத் தெரியும் முன்பே எதிர்க்கட்சியான திமுகவிற்கு கசிவது தவெக உயர்மட்டத் தலைவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் லோக்கல் அளவிலான ஐபி அதிகாரிகள் மற்றும் உளவுத்துறை அறிக்கைகளைத் தயாரிக்கும் ஊழியர்கள் பலர் இன்னும் மாற்றப்படாமல் பழைய பாசத்திலோ அல்லது வேறு காரணங்களிலோ எதிர்க்கட்சியுடன் ரகசியத் தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது. கோட்டை வட்டாரங்களை உலுக்கியுள்ள இந்த இரட்டை விசுவாசத் தகவல் கசிவு, புதிய அரசின் திட்டங்களையும் அரசியல் நகர்வுகளையும் முடக்கிவிடுமோ என்ற அச்சத்தை தவெக தலைமைக்கு ஏற்படுத்தியுள்ளது.
அரசியலுக்கும், குறிப்பாக கோட்டை நிர்வாகத்திற்கும் முற்றிலும் புதிய கட்சியான தவெக, தேர்தல் களத்தில் வரலாற்றுச் சாதனை படைத்து ஆட்சியைப் பிடித்தாலும் அதிகார வர்க்கத்தைக் கையாள்வதிலும் உளவுத்துறையைக் கட்டுப்படுத்துவதிலும் போதிய அனுபவமின்றித் தவித்து வருகிறது என்பதே தற்போதைய யதார்த்த நிலை என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால் உளவுத்துறையின் மொத்த கட்டமைப்பும் திமுகவிற்கு அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும் என்பது தவெகவிற்கு கூடுதல் சவாலாக மாறியுள்ளது. “நமது அரசுக்குள்ளேயே இருக்கும் அந்த கருப்பு ஆடு யார்?” என்ற கேள்வியோடு, இந்தத் தகவல் கசிவைத் தடுக்க உளவுத்துறையில் அதிரடி மாற்றங்களைச் செய்ய தவெக தலைமை தற்போது தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
