CRIME
“ஹோம்வொர்க் எழுதலன்னு இப்படியா பண்ணுவாங்க..?” மாணவி தற்கொலை வழக்கில் வெளியான அதிரவைக்கும் பின்னணி..!!
பெங்களூரு புறநகர்ப் பகுதியான ஆனேக்கல் தாலுகாவில் உள்ள மாரசூரு மடிவாலா கிராமத்தில், மதுஸ்ரீ என்ற 8-ஆம் வகுப்பு மாணவி கடந்த புதன்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்த இம்மாணவி வியாழக்கிழமை காலை அவரது அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். பள்ளி ஆசிரியர்கள் கொடுத்த மன உளைச்சலே தனது மகளின் இந்த முடிவுக்குக் காரணம் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாணவி மதுஸ்ரீ உயிரிழப்பதற்கு முன் எழுதிய உருக்கமான கடிதம் ஒன்றை காவல்துறையினர் கண்டெடுத்துள்ளனர். அதில், வீட்டுப்பாடம் செய்யாததற்காகப் பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னைத் தண்டித்ததாகவும், அதற்கு அபராதமாக 20 ரூபாய் வசூலித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பள்ளியை விட்டு நீக்குவதற்கான மாற்றுச் சான்றிதழை வழங்கிவிடுவேன் என்று ஆசிரியர் மிரட்டியதால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும், அதனாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் கடிதத்தில் மாணவி உருக்கமாக எழுதியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து சூர்யாநகர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தாயார் கிரிஜா கூறுகையில், பள்ளி ஆசிரியர்கள் தனது மகளைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். ஒரு நாள் பள்ளிக்குச் செல்லாத நிலையில், பள்ளியில் என்ன நடந்தது என்பதை அவள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும், தங்களுக்கு இதுபற்றி முன்பே தெரியாமல் போய்விட்டது என்றும் அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
