LATEST NEWS
அடப்பாவி அவரு கலெக்டர்யா! “ஏங்க நீங்க தவெக கட்சி நிர்வாகி தானே?” கலெக்டரையே வம்புக்கு இழுத்த போதை வாலிபர்… தென்காசியில் பரபரப்பு..!!
தென்காசி மாவட்டத்தில் தமிழக அரசின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங் ஐஏஎஸ் நேற்று முன்தினம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார். கடையநல்லூர் தாலுகா மற்றும் புளியங்குடி நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடந்த இந்த ஆய்வின் போது, புளியங்குடி புதிய பேருந்து நிலைய நகராட்சி சுகாதார வளாகத்தின் தூய்மைப் பணிகளையும், அங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்றும் அவர் நேரடியாகப் பார்வையிட்டார்.
அப்போது அங்கு வந்த குடிபோதையில் இருந்த வாலிபர் ஒருவர், கழிவறைக்கு ஐந்து ரூபாய்க்குப் பதில் பத்து ரூபாய் வசூலிப்பதாகக் கூறி ஆட்சியரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதிகாரிகள் அவரைத் தடுக்க முயன்றபோது, “நான் பப்ளிக், உங்களிடம் கேள்வி கேட்பேன்” என்று சத்தமிட்ட அந்த வாலிபர், திடீரென ஆட்சியர் ரஞ்சித் சிங்கை உற்றுப் பார்த்து, “ஏங்க… நீங்க தவெக கட்சி நிர்வாகி தானே?” என்று நேரடியாகக் கேள்வி எழுப்பினார்.
ஆளுங்கட்சியான தவெக-வின் மாவட்ட நிர்வாகி என ஆட்சியரைத் தவறாக நினைத்து அவர் கேட்ட கேள்வியால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பதறிப்போன அவர்கள், “அடப்பாவி… இவர் தவெக காரர் இல்லப்பா, நம்ம மாவட்ட கலெக்டர்யா!” என்று அவரிடம் கூறினர். உண்மையை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட அந்த நபர், உடனடியாக அமைதியாகி அங்கிருந்து பின்வாங்கினார்.
இந்த முழுச் சம்பவத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட, அது தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. தவெக அரசு அமைந்த பிறகு கட்சிப் பொறுப்பாளர்களும், அமைச்சர்களும் அரசு அலுவலகங்களில் தொடர் ஆய்வுகளை மேற்கொண்டு வருவதால், அரசு அதிகாரிகளையும் தவெக பிரமுகர்கள் என்றே பொதுமக்கள் தவறாக நினைக்கும் அளவிற்குத் தமிழகத்தில் தற்போதைய சூழல் நிலவி வருவதாக எதிர்க்கட்சியினர் இந்த வீடியோவை வைத்து விமர்சித்து வருகின்றனர்.
