LATEST NEWS
மரணத்திலும் வென்ற விசுவாசம்! நல்லபாம்பை இரு துண்டாக்கிவிட்டுத் தன்னுயிரை விட்ட நாய்… எஜமானுக்காக செய்த நெகிழ்ச்சி செயல்..!!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பிரம்மபுரம் பகுதியில், தங்களை வளர்த்த எஜமானியைப் பாதுகாப்பதற்காக வளர்ப்பு நாய் ஒன்று பாம்பிடம் போராடி தனது உயிரைத் தியாகம் செய்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரயில்வே டிக்கெட் பரிசோதகரான விகேஷ் என்பவரது வீட்டில், ‘சிஞ்சான்’ என்ற 2 வயது செல்ல நாய் வளர்க்கப்பட்டு வந்தது.
விகேஷின் மாமியார் பத்மகுமாரி வீட்டின் பின்புற திண்ணையில் சமையல் வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது, திடீரென அங்கு சுமார் 7 அடி நீளமுள்ள நல்லபாம்பு ஒன்று படம் எடுத்து நின்றுள்ளது. ஆபத்தான அந்தச் சூழலில் பத்மகுமாரி அலறிய சத்தம் கேட்டு, முன்புறம் படுத்திருந்த சிஞ்சான் ஓடிவந்து பாம்பை கவ்விப் பிடிக்க முயன்றது.
அப்போது அந்த நல்லபாம்பு சீறியபடி சிஞ்சானைக் கடித்த போதிலும், ஆவேசமடைந்த அந்த நாய் பாம்பிடம் போராடி அதனை இரண்டு துண்டுகளாகக் கடித்துக் கொன்றது. எனினும், பாம்பின் விஷம் ஏறியதால் சிறிது நேரத்திலேயே சிஞ்சான் தரையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. தனது எஜமானிக்காக உயிரைக் கொடுத்த நாயின் இந்த விசுவாசம் அப்பகுதி மக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
