LATEST NEWS
மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! ரூ. 1,000 முதல் ரூ. 25,000 வரை..! மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம்… உடனே அப்ளை பண்ணுங்க..!!
இந்திய அரசின் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தொழிலாளர் நல அமைப்பு, 2026-27 ஆம் நிதி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்கம் மற்றும் சினிமாத் தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 1-ஆம் வகுப்பு முதல் உயர் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு, அவர்களின் படிப்பிற்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை நேரடியாக வழங்கப்படுகிறது.
தகுதியுள்ள மாணவர்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளம் (https://scholarships.gov.in) வாயிலாக ‘ஒரு முறை பதிவு’ செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மைய வங்கி அமைப்பு சார்ந்த சேமிப்புக் கணக்கு வைத்திருப்பது அவசியம். மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், மாணவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள் இத்தளத்தில் பதிவாகியிருப்பதுடன், விண்ணப்பங்களை முறையாகச் சரிபார்த்து ஒப்புதல் அளிக்க வேண்டும்; சரிபார்க்கப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 31, 2026 கடைசியாகும்; உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 31, 2026 கடைசி நாளாகும். கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களுக்கு “மத்திய நல ஆணையர் அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, சிட்கோ நிர்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க. தொழில் பூங்கா, கிண்டி, சென்னை – 600032” என்ற முகவரியிலோ, 044-29530169 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ தொடர்புகொள்ளலாம்.
