LATEST NEWS
“என்ன CM சார்..! நீட் போராட்டத்தால படம் ஊத்திக்கிச்சின்னு கவலையா..?” – முதலமைச்சர் விஜய்யை வம்புக்கு இழுத்த ஆர்.பி.உதயகுமார்..!!
தமிழக முதலமைச்சர் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் மற்றும் தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகள் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கடுமையான அரசியல் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ஆட்சியில் நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகள் நிலவி வரும் வேளையில், தவெகவினர் மக்கள் பணிகளைப் புறந்தள்ளிவிட்டுத் திரைப்படக் கொண்டாட்டங்களில் மூழ்கியிருப்பதாகச் சாடியுள்ளார்.
குறிப்பாக, நீட் போராட்டக் கவலைகளுக்கு இடையே ‘ஜனநாயகன்’ படம் வெளியாகி ஊத்திக் கிச்சு என்ற கவலையில் முதலமைச்சர் விஜய் இருக்கிறார் என்றும், கடந்த இரண்டு நாட்களாக அவர் தலைமைச் செயலகத்திற்கு வரவில்லை என்றும் ஆர்.பி. உதயகுமார் குற்றஞ்சாட்டியுள்ளார். வார நாட்களில் வழக்கமாகத் தவறாமல் கோட்டைக்கு வரும் முதலமைச்சர், படம் வெளியான சமயத்தில் வராததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நாட்டின் முக்கியப் பிரச்சினைகளைத் தள்ளி வைத்துவிட்டு, ஆளுங்கட்சி அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தியேட்டர்களில் ரீல்ஸ் போடச் சென்றுவிட்டதாக அவர் கிண்டலடித்துள்ளார். படம் பார்த்த அமைச்சர்கள் தியேட்டர்களில் சிந்திய கண்ணீருக்குக் குற்றால அருவியே தோற்றுவிடும் என எள்ளிநகையாடிய அவர், இந்த 80 நாட்கால தவெக ஆட்சியில் முதலமைச்சர் விஜய்யின் மிகப்பெரிய சாதனை ‘ஜனநாயகன்’ படத்தை வெளியிட்டது மட்டும்தான் என எதுகை மோனையுடன் கடுமையாக விமரிசித்துள்ளார்.
