LATEST NEWS
“அட கொடுமையே…! 22 அடி உயரத்தில் உயிருக்குப் போராடிய கரடி… உதவி வர அரை மணி நேரம் தாமதமா..? நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்..!”
அமெரிக்காவின் நியூ மெக்சிகோ பகுதியில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றின் அருகே, 22 அடி உயரமுள்ள மின் கம்பத்தின் மீது ஒரு கருப்புக் கரடி ஏறி 7,200 வோல்ட் உயர் அழுத்த மின்சாரக் கம்பிகளுக்கு இடையே மாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வழியே வாகனத்தில் சென்ற ஒரு குடும்பத்தினர், கரடி பயத்துடனும் பதற்றத்துடனும் தவித்துக்கொண்டிருப்பதைப் பார்த்து உடனடியாக 911 அவசர உதவி எண் மற்றும் வனவிலங்கு துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவல் தெரிவித்த பின்னரும் மீட்புக் குழுவினர் அரை மணி நேரத்திற்கு மேலாக சம்பவ இடத்திற்கு வரவில்லை. மீண்டும் அவசர எண்ணைத் தொடர்புகொண்டபோது, “கரடி பாதுகாப்பாக உணர்ந்தால் அதுவே தானாக கீழே இறங்கிவிடும்” என்று அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளையில், அங்கு கூடிய பாதசாரிகளும் பயணிகளும் விலகிச் செல்லாமல் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்கத் தொடங்கியதால், அந்தச் சத்தத்திலும் கூச்சலிலும் கரடி மேலும் அச்சமடைந்து கீழே இறங்க முடியாமல் கம்பத்திலேயே மாட்டிக்கொண்டது.
நீண்ட தாமதத்திற்குப் பிறகு மின்சாரத் துறையினரும் காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தடைவதற்குள், உயர் அழுத்த மின்சாரம் தாக்கி அந்தப் பாவம் அறியா கரடி பரிதாபமாக உயிரிழந்தது. “மக்கள் கூட்டம் கூடாமல் கரடியை தனிமையில் விட்டிருந்தால் அது தானாகவே இறங்கியிருக்கும்” என வனவிலங்குத் துறை விளக்கம் அளித்தபோதிலும், சரியான நேரத்தில் மீட்பு நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளின் அலட்சியத்தையும், வேடிக்கை பார்த்து வீடியோ எடுத்த மனிதர்களின் நடவடிக்கையையும் கண்டித்து சமூக வலைதளங்களில் பொதுமக்கள் கடுமையாகக் கொந்தளித்து வருகின்றனர்.
