LATEST NEWS
உஷார்..! “வீட்டில் தனியாக இருந்த பெண்” தண்ணீர் கேட்பது போல நடித்து… கதவை உடைத்து டெலிவரி பாய் செய்த காரியம்… இணையத்தை உலுக்கிய வீடியோ..!!
ஆன்லைன் மளிகைப் பொருட்கள் விநியோக நிறுவனமான ஜெப்டோ டெலிவரி ஊழியர் ஒருவர், தனியாக இருந்த பெண் ஒருவரின் வீட்டிற்குள் நுழைய முயன்று, கதவைத் தட்டி ரகளையில் ஈடுபட்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘Thatamethystgirl’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாதிக்கப்பட்ட பெண் பகிர்ந்துள்ள வீடியோவின்படி, ஆர்டர் செய்த பொருட்களைக் கொண்டு வந்த டெலிவரி ஊழியர், தனக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் தருமாறு கேட்டுள்ளார். அந்தப் பெண் தண்ணீர் கொடுக்க முன்வந்தபோது, அந்த ஊழியர் வீட்டின் உள்ளே வர அனுமதி கேட்டுள்ளார்.
வீட்டில் தனியாக இருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தப் பெண் அவரை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஊழியர், “என்னை உள்ளே வர விடுங்கள்” எனத் தொடர்ந்து பிடிவாதம் பிடித்ததுடன், வீட்டின் கதவை வலுக்கட்டாயமாகப் பூட்டிய பிறகும் விடாமல் அழைப்பு மணியை அடித்தும், கதவை பலமுறை பலமாகத் தட்டியும் அச்சுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவத்தால் அந்தப் பெண் பெரும் அச்சத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளார்.
இந்த விவகாரத்தை வீடியோவாகப் பதிவிட்டு அந்தப் பெண் ஜெப்டோ நிறுவனத்திடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார். இதனைக் கவனித்த ஜெப்டோ நிறுவனம், அந்தப் பெண்ணின் பதிவில் உடனடியாகப் பதிலளித்து, அவரிடமிருந்து கூடுதல் விபரங்களைப் பெற்று சம்பந்தப்பட்ட டெலிவரி ஊழியர் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளது. இதற்கிடையே, தனியாக வசிக்கும் பெண்கள் தங்களின் பாதுகாப்பிற்காக வீட்டின் வாசலில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்திக் கொள்வது அவசியம் என நெட்டிசன்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
