LATEST NEWS
ஐய்யோ..! 10 ஆண்டுகள் மகளை ‘மகனாக’ வளர்த்த தந்தை… தாலிபான் பயத்தால்… ஆப்கானிஸ்தானில் அரங்கேறிய நெஞ்சை உருக்கும் நிஜக் கதை..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண் உரிமைப் போராளி நீலோஃபர் அயூபி மற்றும் அவரது தந்தையின் உணர்ச்சிப்பூர்வமான கதை நெஞ்சை உருக்குவதாக உள்ளது. 1996-ல் ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரில் பிறந்த நீலோஃபருக்கு 4 வயதாக இருந்தபோது, ஹிஜாப் அணியவில்லை என்பதற்காகத் தெருவில் ஒருவரால் தாக்கப்பட்டார். இந்தச் சம்பவத்தால் பயந்துபோன அவரது தந்தை, தனது மகளைத் தாலிபான்களின் கொடூரமான கட்டுப்பாடுகள் மற்றும் அத்துமீறல்களிலிருந்து காப்பாற்ற ஒரு கடினமான முடிவை எடுத்தார். நீலோஃபரின் முடியைக் குட்டையாக வெட்டி, அவரது சகோதரர்களின் உடைகளை அணியச் செய்து, பெயரை மாற்றி அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவரை ஒரு ‘ஆண் குழந்தையாகவே’ சமூகத்திற்கு அடையாளப்படுத்தினார்.
ஆப்கானிஸ்தானில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் இந்த நடைமுறை ‘பாச்சா போஷ்’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி, கடுமையான கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில் பெண் குழந்தைகள் சுதந்திரமாக வெளியே செல்லவும், பள்ளிக்குச் செல்லவும், குடும்பத்திற்கு உதவவும் தற்காலிகமாக அவர்களை ஆண் குழந்தைகளைப் போல வளர்ப்பார்கள். நீலோஃபர் 4 முதல் 14 வயது வரை ஒரு சிறுவனைப் போலத் தனது தந்தையுடன் சந்தைக்குச் செல்வது, பேருந்தில் பயணிப்பது, தெருக்களில் பயமின்றி விளையாடுவது என சுதந்திரமாக வாழ்ந்தார். ஆனால், 13 வயதில் அவருக்கு முதன்முதலாக மாதவிடாய் ஏற்பட்டபோது, இந்த போலி அடையாளத்தை மேலும் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. மீண்டும் பெண்ணாக மாறி நான்கு சுவர்களுக்குள் முடங்குவது அவருக்குப் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளித்தது.
https://www.instagram.com/reel/DbZ5u_ehqz1/?utm_source=ig_web_button_share_sheet
பெண்ணாக மாறிய பிறகு ஏற்பட்ட மன உளைச்சலையும் மீறி, தந்தையின் ஆதரவோடு நீலோஃபர் இந்தியாவில் தனது படிப்பை முடித்தார். பின்னர் காபூலில் ஃபர்னிச்சர் தொழில் தொடங்கி நூற்றுக்கணக்கான ஆப்கானிய பெண்களுக்கு வேலைவாய்ப்பும் அளித்தார். ஆனால் 2021-இல் தாலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியபோது, உயிருக்குப் பயந்து தனது குடும்பத்துடன் போலந்து நாட்டிற்குத் தப்பிச் செல்ல வேண்டியதாயிற்று. தற்போது போலந்தில் வசித்து வரும் நீலோஃபர், சர்வதேச மேடைகளில் ஆப்கானிய பெண்களின் உரிமைக்காகவும், தாலிபான்களின் ஆட்சியின்கீழ் பெண்கள் சந்திக்கும் துயரங்களை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
