LATEST NEWS
“நேர்மையாக இருந்தால் எல்லாமே சாத்தியம்..! எங்கள் தலைவரே சாட்சி..” பட்ஜெட் விவாதத்தில் நிதியமைச்சர் மரிய வில்சன் குட்டி கதை மூலம் மாஸ் பதிலுரை..!!
தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில், நிதியமைச்சர் மரிய வில்சன் பதிலுரை வழங்கிப் பேசினார். அப்போது, சட்டமன்றத்தில் தனது கருத்துகளைக் குறிப்பிட்டுப் பேசும்போது, ஒரு சுவாரசியமான குட்டிக்கதையைக் கூறி உறுப்பினர்களுக்கு விளக்கம் அளித்தார்.
அந்தக் கதையில்: “அடுத்து இந்தத் தேசத்தை ஆளப்போவது யார்?” என்ற போட்டியை ஒரு பெரியவர் நடத்தினார். அதில் பங்கேற்ற இளைஞர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு விதையைக் கொடுத்த பெரியவர், “3 மாதங்களுக்குப் பிறகு இதைச் செடியாக வளர்த்துக்கொண்டு வாருங்கள்” எனக் கூறினார். 3 மாதங்கள் கழித்து, பெரும்பாலான இளைஞர்கள் அழகாகப் பூத்துக் குலுங்கும் செடிகளோடு வந்தனர். ஆனால், ஒரே ஒரு இளைஞர் மட்டும் எந்தச் செடியும் வளராத வெறும்தொட்டியுடன் வந்தார். அதைப் பார்த்து மற்றவர்கள் கேலி செய்து சிரித்த நிலையில், அந்தப் பெரியவர் அந்த இளைஞரையே வெற்றியாளராக அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்தார்.
அதற்கு விளக்கமளித்த பெரியவர், தான் அனைவருக்கும் கொடுத்தது வேகவைத்த விதை என்றும், அது ஒருபோதும் முளைக்காது என்றும் கூறினார். வெற்றி பெறுவதற்காகப் பொய் சொல்லாமல், குறுக்கு வழியைக் கையாளாமல் நேர்மையாக வந்ததால் அந்த இளைஞரைத் தேர்வு செய்ததாகத் தெரிவித்தார். இந்தக் கதையைக் கூறி உரையை நிறைவு செய்த அமைச்சர் மரிய வில்சன், “வெற்றி பெறுவதற்காகப் பொய் சொல்லாமல் குறுக்குவழியைப் பின்பற்றாமல், நேர்மையாக இருந்தால் எல்லாமே சாத்தியம் என்பதற்கு எங்கள் தலைவரே சாட்சி” என்று கூறினார்.
