LATEST NEWS
“எங்க ஆட்சியில் சரியில்லாததால் தான் நாங்க எதிர்க்கட்சி வரிசையில இருக்கோம்” – எ.வ.வேலுவின் எதார்த்தப் பேச்சை மேசையை தட்டி வரவேற்ற தவெக MLA-க்கள்.!!
தமிழக சட்டப்பேரவையின் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின் போது, திமுக மற்றும் ஆளுங்கட்சியான தவெக இடையே சுவாரசியமானதொரு திருப்பம் அரங்கேறியுள்ளது. தவெக ஆட்சியில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இதற்குப் பதிலளித்த தவெக அமைச்சர்கள், சட்டம் ஒழுங்குப் பிரச்சினைக்குத் தற்போதைய அரசைக் குறை சொல்வதை விடுத்து, கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நடந்த தவறுகளையும் குறைபாடுகளையும் அவையில் பட்டியலிட்டுப் பேசத் தொடங்கினர்.
அமைச்சர்களின் இந்தப் பதிலடிப் பேச்சுக்கு அவையிலேயே மிக எதார்த்தமான முறையில் பதிலடி கொடுத்துப் பேசினார் திமுக மூத்த தலைவரும் எம்.எல்.ஏ-வுமான எ.வ.வேலு. அவர் பேசுகையில், “தவெக ஆட்சியில் நடைபெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால், அதற்குரிய சரியான பதிலை மட்டும் சொல்லுங்கள்; அதை விடுத்துவிட்டு அமைச்சர்கள் எதற்கெடுத்தாலும் கடந்த திமுக ஆட்சி மீது குறை சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது” என்று மிகக் காட்டமாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய எ.வ.வேலு, “எங்கள் ஆட்சியில் எல்லாம் சரியாக இல்லாததால் தானே நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று இன்று எதிர்க்கட்சி வரிசையில் வந்து அமர்ந்திருக்கிறோம்!” என்று மிக எதார்த்தமாகப் பேசினார். எ.வ.வேலுவின் இந்த வெளிப்படையான மற்றும் நேர்மையான பேச்சைக் கேட்டு அவையிலிருந்த ஆளுங்கட்சியான தவெக எம்.எல்.ஏ-க்கள் தங்களது மேசைகளை பலத்த ஓசையுடன் தட்டி பலமாக வரவேற்றனர். திமுக எம்.எல்.ஏ-வின் பேச்சை ஆளுங்கட்சியினரே வரவேற்ற இந்தச் சம்பவம் சட்டப்பேரவையில் பெரும் நெகிழ்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
