LATEST NEWS
ஐயோ கொடுமையே…! ராக்கி கட்டிய சில நாட்களிலேயே சோகம்… டெல்லி விடுதி விபத்தில் பலியான ஒரே தம்பிக்கு ஈமத்தீ மூட்டிய அக்கா… நெஞ்சை உரைய வைக்கும் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ஔரையா மாவட்டம் திபியாபூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஹோமியோபதி பார்மசிஸ்ட் விசம்பர் சிங் என்பவரின் ஒரே மகனான பவன் குமார், டெல்லி பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் சேர்வதற்காக கடந்த ஜூலை மாதம் டெல்லி சென்றிருந்தார். நான்கு சகோதரிகளுக்கு ஒரே தம்பியான இவர், சமீபத்தில் நடைபெற்ற ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு ஊருக்குச் சென்று சகோதரிகளிடம் ராக்கி கட்டிக் கொண்டு டெல்லி திரும்பியிருந்தார். இந்நிலையில், டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் அவர் தங்கியிருந்த ஐந்து மாடி விடுதி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், பவன் குமார் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்தில் உயிரிழந்த பவன் குமாரின் உடல் திங்கள்கிழமை நள்ளிரவு டெல்லியிலிருந்து அவரது சொந்த ஊரான திபியாபூருக்குக் கொண்டு வரப்பட்டது. மகனின் உடலைப் பார்த்த தாய் மீரா தேவி மற்றும் சகோதரிகள் கதறி அழுத காட்சி காண்போரை நெகிழ வைத்தது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான உறவினர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
இறுதிச் சடங்கின் போது, சுடுகாட்டில் பவன் குமாரின் இளைய சகோதரி தனது ஒரே சகோதரனின் உடலுக்கு ஈமத்தீ மூட்டி இறுதி மரியாதை செலுத்தினார். சில நாட்களுக்கு முன்புதான் தன் சகோதரனின் நீண்ட ஆயுளுக்காக ராக்கி கட்டிய சகோதரி, அதே கைகளால் அவருக்கு இறுதி மரியாதை செய்த காட்சி அனைவரையும் உரைய வைத்தது. விதிகளுக்குப் புறம்பாகக் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானமே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நிதியுதவியும் அரசு வேலையும் வழங்க வேண்டும் என அப்பகுதி முக்கியப் பிரமுகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
