CRIME
திடீர் திருப்பம்..! “மார்பில் கடித்த அடையாளம்.. வயிற்றில் மர்ம திரவம்” மதுரை +1 மாணவன் தமிழ்ச்செல்வன் பிரேத பரிசோதனையில் வெளியான பகீர் தகவல்கள்..!!
மதுரை ஆனையூர் அருகே மாயமான பிளஸ்-1 மாணவன் தமிழ்ச்செல்வன் கண்மாய் தண்ணீரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதற்கட்டமாக, நண்பர்களுடன் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி இறந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்ட நிலையில், தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை இந்த மரணத்தில் உள்ள மர்மத்தை அதிகரித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, சிறுவனின் வயிற்றில் வெளிர் பழுப்பு நிற திரவம் இருந்ததும், அவனது மார்பில் கடித்ததற்கான அடையாளங்கள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவனது கைகள் மற்றும் முட்டிகளில் சிராய்ப்புக் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்த தமிழ்ச்செல்வன் (16), ஆரப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்தான். கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் வெளியே சென்றவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவனது தாய் கூடல்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார், கூடல்நகர் அப்துல்கலாம் நகர் பகுதியில் உள்ள கண்மாயில் இருந்து அவனது உடலை மீட்டனர்.
இந்த மரணத்தில் தங்களுக்குக் கடுமையான சந்தேகம் இருப்பதாகத் தமிழ்ச்செல்வனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். தமிழ்ச்செல்வன் வேறொரு சமூகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவருடன் பழகி வந்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவியின் தந்தை தங்களை ஏற்கனவே மிரட்டி, தமிழ்ச்செல்வனைத் தாக்கியதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, அந்த மாணவியின் தந்தையே தங்களது மகனைக் கடத்திக் கொலை செய்திருக்கலாம் என அவர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
தற்போது இந்த விவகாரத்தைக் கொலை வழக்காக மாற்றி விசாரிக்கக் கோரி உறவினர்கள் மதுரை அரசு மருத்துவமனை முன்பு திரண்டு போராடினர். போலீசார் முறையாக விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை உடலைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், பிரேத பரிசோதனையை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் இந்த அதிர்ச்சித் தகவல்களைத் தொடர்ந்து, மாணவியின் தந்தை மற்றும் சம்பவத்தன்று உடன் சென்ற நண்பர்களிடம் போலீசார் தங்களின் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
