CRIME
“விளையாட்டு வினையானது..!” 7 வயது சிறுவன் மரணத்தில் அதிரடி ட்விஸ்ட்.. நண்பனின் தாய் கைது.. பின்னணியில் இருந்த அதிர்ச்சி உண்மை..!!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மாயமான 7 வயது சிறுவன் முத்துவேல் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில், சிறுவனின் மரணத்தை மறைத்ததாக அவனது 10 வயது நண்பனின் தாய் சந்தியா என்பவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலூர் பகுதியில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த சிறுவன் முத்துவேல், திடீரென சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்துப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், இந்த மரணத்தின் பின்னணியில் இருந்த அதிர்ச்சித் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
விசாரணையின்படி, முத்துவேலும் அவனது 10 வயது நண்பனும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருந்தபோது, விளையாட்டாக முத்துவேலின் கழுத்தில் கயிற்றைக் கட்டி அந்த நண்பன் இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் எதிர்பாராதவிதமாக மூச்சுத்திணறி முத்துவேல் அங்கேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த 10 வயது சிறுவனின் தாய் சந்தியா, தனது மகனைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில் யாரிடமும் கூறாமல் முத்துவேலின் மரணத்தை மறைத்து, உடலை வீசியது போலீஸ் விசாரணையில் அம்பலமானது. இதையடுத்து, குற்றத்தை மறைத்த குற்றத்திற்காகச் சந்தியாவைப் போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
