“வெளிநாட்டில் வேலை வாங்கி தாரேன்.. ” ஆசைவார்த்தைக் கூறி 41 இளைஞர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி.. போலி விசா கும்பல் தலைவன் அதிரடி கைது..!! – cinefeeds
Connect with us

CRIME

“வெளிநாட்டில் வேலை வாங்கி தாரேன்.. ” ஆசைவார்த்தைக் கூறி 41 இளைஞர்களிடம் ரூ.40 லட்சம் மோசடி.. போலி விசா கும்பல் தலைவன் அதிரடி கைது..!!

Published

on

டெல்லி ஜவஹர் பூங்கா பகுதியில் ‘மெசர்ஸ் எஸ்.எஸ். ஓவர்சீஸ் டிராவல்ஸ் ஏஜென்சி’ என்ற பெயரில் போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்தி வந்த சாந்தாராம் பார்கு ஷெல்கே, தனது நிறுவனத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது போல் காட்டுவதற்காக ஜிஎஸ்டி பதிவையும் பெற்றிருந்தார். சமூக வலைதள விளம்பரங்களை நம்பி தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து அணுகிய 41 இளைஞர்களிடம், விசா மற்றும் ஆவணங்களைச் சரிபார்ப்பதாகக் கூறி பெருந்தொகை வசூலித்துள்ளார். அதன்பின் போலியான வேலைவாய்ப்பு கடிதங்கள், விசா மற்றும் விமான டிக்கெட்டுகளை வழங்கி ஏமாற்றியுள்ளார். இளைஞர்கள் விமான நிலையம் சென்றபோதுதான் தங்களுக்கு வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள் எனத் தெரியவந்தது. இதுகுறித்து கேட்க முயன்றபோது சாந்தாராம் அலுவலகத்தைப் பூட்டிவிட்டு, மொபைல் போன்களையும் அணைத்துவிட்டுத் தலைமறைவானார்.


பாதிக்கப்பட்டவர்களின் புகாரைப் பெற்ற டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார், மோசடிப் பணம் நிறுவனத்தின் கணக்கிலும் சாந்தாராமின் தனிப்பட்ட கணக்கிலும் பரிமாறப்பட்டதை உறுதி செய்து விசாரணையைத் தொடங்கினர். டெல்லி, உபி, ஜார்கண்ட் எனப் பல மாநிலங்களில் இருப்பிடங்களை மாற்றிக் கொண்டு போலீஸாருக்குப் போக்கு காட்டிய சாந்தாராமுக்கு எதிராக நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெறப்பட்டது. இறுதியாக, வங்கிப் பரிவர்த்தனை மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் மூலம் மகாராஷ்டிராவின் நாலசோபரா பகுதியில் பதுங்கியிருந்த அவரைத் தனிப்படை போலீஸார் அதிரடியாகக் கைது செய்து நீதிமன்றக் காவலில் எடுத்துள்ளனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய அவரது கூட்டாளி ஆசிப்பைத் தேடி வரும் போலீஸார், சாந்தாராமின் குற்றப் பின்னணி குறித்தும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in