CRIME
“வெளியே சொன்னால் உன் மகன் இறந்துவிடுவான்…” ரூ.10 முத்திரைத்தாளில் மிரட்டி 70 லட்சத்தை அள்ளிய போலி சாமியார் கும்பல்.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், ஒரு சிறுவனின் உடல்நிலையைக் காரணம் காட்டி அவனது குடும்பத்தினரிடம் நிலவிய மூடநம்பிக்கை மற்றும் பயத்தைப் பயன்படுத்தி, போலி சாமியார் ஒருவன் தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து 70 லட்சம் ரூபாய் வரை பறித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பிஜ்னோரைச் சேர்ந்த ஒரு சிறுவன் நோய்வாய்ப்பட்ட போது, அவனது குடும்பத்தினரைத் தொடர்புகொண்ட சஞ்சய் சர்மா என்ற ‘பகாரி பண்டிட்’, சிறுவனின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகக் கூறி பயமுறுத்தியுள்ளார். இதற்கான பரிகாரப் பூஜைகளைச் செய்வதாகக் கூறி, அந்தக் குடும்பத்தினரை ஹரித்வாரில் உள்ள கங்கை கரைக்கும், ஷியாம்பூர் காங்ரியில் உள்ள காளி மாதா கோயிலுக்கும் அழைத்துச் சென்றுள்ளார். இந்த விவகாரம் யாருக்காவது தெரிந்தால் காளி மாதாவின் கோபத்தால் சிறுவன் இறந்துவிடுவான் என்று 10 ரூபாய் முத்திரைத்தாளில் எழுதி வாங்கிக் கொண்டு, பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவனின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற பயத்தில், அந்தக் குடும்பத்தினர் தங்களது வீட்டை விற்று 38 லட்சம் ரூபாயும், தாயின் நகைகளை விற்று 14 லட்சம் ரூபாயும் சாமியாரிடம் கொடுத்துள்ளனர். மேலும், தந்தை தனது அரசுப் பணியிலிருந்து 13 லட்சம் ரூபாய் கடன் வாங்கியும், பூஜை பொருட்களுக்காக 5 லட்சம் ரூபாயும் என மொத்தம் 70 லட்சம் ரூபாயை வாரி வழங்கியுள்ளனர். இந்தத் தொடர் மிரட்டல்களால் மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத்தினர் இறுதியாகப் பிஜ்னோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் தீவிர நடவடிக்கை எடுத்த போலீஸார், போலி சாமியாரான பகாரி பண்டிட் என்ற சஞ்சய் சர்மா, மற்றும் அவனது கூட்டாளிகளான மோனு சவுத்ரி, யாஷ் சவுத்ரி, கோமல் சிங் ஆகிய நான்கு பேரையும் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
